பெரு நாட்டில் காலணிக்கடை ஒன்றில் திருடர்கள் சிலர் சுமார் 200 காலணிகளை திருடியுள்ளனர். இதில் விஷயம் என்னவென்றால் அவர்கள் திருடிய அத்தனை காலணிகளுமே வலது கால் காலணிகள்.
பெருவில் உள்ள ஹுவன்கயோ பகுதியில் இயங்கிவரும் ஒரு காலணிக் கடையில் மூன்று திருடர்கள் இந்தத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கடை உரிமையாளர் தெரிவித்துள்ளபடி திருடுபோன காலணிகளின் விலை சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கலாம். ஆனால், அவர்கள் எதற்காக வெறும் வலது கால் காலணிகளை மட்டும் திருடிசென்றனர் என்று தனக்கு புரியவில்லை என அவர் கூறுகிறார்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருடர்கள் நள்ளிரவில் கடையின் கண்ணாடியை உடைத்து காலணிகளை திருட நுழைகின்றனர். ஒருவேளை யாரேனும் பார்த்துவிடுவார்கள் என்ற பதற்றத்தில் அவர்கள் இவ்வாறு வலது கால் காலணிகளை மட்டும் திருடினார்களா? அல்லது தெரிந்தே இவ்வாறு செய்தார்களா? என்று காட்சிகளின் அடிப்படையில் கண்டிபிடிக்க இயலவில்லை என்று இதை ஆராய்ந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் பற்றி அப்பகுதி போலீசார், சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்களைச் சேகரித்துள்ளதாகவும், கைரேகை மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் திருடர்களையும், வலது கால் காலணிகள் மட்டும் திருடுபோன காரணங்களையும் தேடிவருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.


























