இந்திய அளவில் நடைபெற்ற குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இவ்விழாவில் தலைமை உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”அரசுப் பணியில் இணைவது என்பது பலரின் விருப்பமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்திய ஆட்சிப் பணிகளில் தேர்வாகி குடிமைப்பணிகளில் ஈடுபடுவது பல இளைஞர்களின் கனவாக உள்ளது. இப்படியிருக்கையில் அக்கனவைச் சாத்தியப்படுத்தியிருப்பவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ‘மக்களிடம் செல், அவர்களோடு வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள், அவர்கள் தருவதை பெற்றுக்கொள், அவர்களை மேம்படுத்து’ என்ற பேரறிஞர் அண்ணாவின் கருத்தை மனதில் கொண்டு, மக்களுக்கு சேவையாற்றுவது என்கிற கொள்கையிலிருந்து விலகாமல் மக்கள் பணியாற்றிட வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.
























