சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் தோனி மேட்ச் ஃபினிஷிங் செய்தது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தலைவன் கம்பேக்டா என்று காலரை தூக்கி விட்டுத் திரிகிறார்கள் தோனி ரசிகர்கள்.
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 134 ரன்கள் எடுத்தது. 135 ரன்கள் இலக்கோடு களமிறங்கியது சென்னை அணிக்கு இதெல்லாம் ஒரு டார்கெட்டா என்றுதான் ரசிகர்கள் நினைத்தார்கள். ருத்துராஜ் கெய்க்வாடும், டூ ப்ளசிசும் பார்டனர்ஷிப் போட்டு சன்ரைசர்ஸ் பந்து வீச்சாளர்களை பந்தாட, 45 ரன்களோடு கெய்க்வாட் அவுட் ஆனார். அதன் பிறகு டூ ப்ளசிஸ், ரெய்னா, மொயின் அலி என தொடர்ந்து விக்கெட்டுகள் விழ பதற்றம் தொற்றிக் கொண்டது. இப்படியான சூழலில்தான் தோனி களம் இறங்கினார்.
அம்பத்தி ராயுடுவும் தோனியும் ரன்களைக் கூட்டி நிதானமாக விளையாடினார்கள். 133 ரன்கள் இருந்த போது ஸ்ட்ரைக்கில் தோனி இருந்தார். 2 பந்துகளுக்கு 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற நிலையில் தோனி ஒரு சிக்ஸ் அடித்து மேட்ச் ஃபினிஷிங் செய்தார். இதனால் அரங்கமே தோனி தோனி என்று அரற்றியது. தோனியின் மகள் இதனைப் பார்த்து கைதட்டி மகிழ்ந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. ஒரு சிக்ஸில் என்ன இருக்கிறது என்று கேட்கலாம். தோனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடவில்லை. 10 மேட்சுகளில் 52 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் அவ்வளவுதான் தலைவன் ஃபார்ம் அவுட் என ரசிகர்களே நினைத்திருந்தார்கள். அப்படியான சூழலில் மைதானத்தைத் தாண்டிப் பறந்த சிக்ஸ் அத்தனை விமர்சனங்களையும் பறக்க விட்டிருக்கிறது.
























