இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி ஒவ்வொரு ஆட்டங்களிலும் சொற்ப ரன்களே எடுத்து வருவதால் தோனி ரசிகர்களே கேள்வி கேட்கும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார் தோனி. பேட்டிங்கில் அவர் ஃபார்ம் இழந்து விட்டதாகக் கூறினாலும் கேப்டன்சியில் அவர்தான் கெத்து என்கிற கருத்தும் நிலவுகிறது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பத்து போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. சென்னை ரசிகர்கள் இதனால் மகிழ்ச்சியாக இருந்தாலும் தோனியின் பேட்டிங் ஃபார்ம் அவுட் குறித்த கவலையில் இருக்கின்றனர். கடந்த பத்து போட்டிகளிலும் சேர்த்து தோனி வெறும் 52 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். இதனால் சென்னை ரசிகர்கள் மற்றும் தோனி ரசிகர்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகியிருக்கின்றனர்.
தோனி 40 வயதைத் தொட்டு விட்டார். கிரிகெட்டைப் பொறுத்த வரைக்கும் அதன் ஃபார்முக்கு வயதும் முக்கியக்காரணம் என்றாலும் அதற்கென இப்படியா என்று ரசிகர்கள் கேட்கத் துவங்கியிருக்கின்றனர். வெற்றி பொறுவோமா மாட்டோமா என்கிற பதட்டத்தில் இருக்கும் சூழலில் ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் கூட ஆட்டத்தை மாற்றியமைக்கும் வல்லமை பெற்றவராய் விளங்கியவர் தோனி. ஆனால் தற்போது அப்படியான சூழலில் தோனி களமிறங்கினாலே சென்னை ரசிகர்கள் கதிகலங்கிப்போய் விடுகின்றனர். தோனி அவுட் ஆனதும் எதிர் அணி ரசிகர்களை விட சென்னை அணி ரசிகர்கள் கைதட்டி கொண்டாடும் நிலை ஆகி விட்டது.
பேட்டிங்கில் இந்த ஆண்டு தோனி தன்னை நிருபிக்கவில்லையென்றாலும் கேப்டன்சியில் தனது ஆளுமையை நிருபித்திருக்கிறார். தெளிவான திட்டமிடலின் விளைவாகவும், திறமையாளர்களை சரியான தருணத்தில் பயன்படுத்தும் போக்காலும் சென்னை இதுவரை 8 வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த தொடர் முடிவதற்குள் தோனி பேட்டிங்கிலும் அடித்து வெளுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
























