ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் வாக்குப்பதிவும் மற்றும் வாக்கு எண்ணிக்கையின்போது மது விற்பனைக்குத் தடை விதித்து டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட/ பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு மட்டும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாதிருந்த நிலையில், அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவிருக்கிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படவிருக்கிறது. இதன் பொருட்டு அக்டோபர் 4ம் தேதியிலிருந்து 9ம் தேதி வரையிலும், மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான அக்டோபர் 12ம் தேதியும் மதுவிற்பனைக்குத் தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுபற்றி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. ஏனைய 28 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல் அக்டோபர் 9ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இதன் பொருட்டு, முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் அக்டோபர் 4ம் தேதி காலை 10 மணி முதல் 6ம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மற்றும் தற்செயல் தேர்தல்கள் நடைபெறும் பகுதிகளில் அக்டோபர் 7ம் தேதி காலை 10 மணி முதல் 9ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும் மது விற்பனை தடைசெய்யப்படுகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான அக்டோபர் 12ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளில் 5 கி.மீ. சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் மதுக்கூடம் மற்றும் மதுபானக் கடைகள் மூடியிருக்க, உரிய ஆணைகள் வெளியிட அரசை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
























