மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் மதியம் 3 மணி வரையிலும் 48.08 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி பாஜக வேட்பாளரிடம் தோல்வியுற்றார். இருந்தும் முதல்வராகப் பதவியேற்ற அவர், 6 மாதங்களுக்குள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்கிற தேர்தல் ஆணையத்தின் விதி. மம்தாவுக்கு சாதகமாக இருக்கும் பவானிபூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தன் பதவியை ராஜினாமா செய்ததால் அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மேலும், வேறு காரணங்களுக்காக ஜாங்கிபூர் மற்றும் சாம்செர்கன்ஜ் ஆகிய தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
பவானிபூர் தொகுதியில் மம்தா போட்டியிடுவதால் இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் தொகுதியாக அது இருக்கிறது. பவானிபூரில் 97 வாக்குச்சாவடிகள் உட்பட 3 தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 287 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மம்தாவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியில் யாரும் போட்டியிடாத நிலையில் பாஜக சார்பில் பிரியங்கா போட்டியிடுகிறார். பாஜகவுக்கும், மம்தா பானர்ஜிக்கும் கடுமையான மோதல் நிகழ்ந்து வருகின்றது. சட்டமன்றத் தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் வென்ற நிலையிலும் நந்திகிராம் தொகுதியில் மம்தாவை பாஜக வேட்பாளர் தோற்கடித்தார். இந்த மோதலில் மம்தா வெல்வாரா என்பதனாலேயே இத்தேர்தல் கவனிக்கபப்படுகிறது.
























