தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்ற தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரி தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தூத்துக்குடி செல்வதற்காக இன்று காலை சென்னை விமான நிலையம் சென்றுள்ளார். அவர் இரண்டு மடிக்கணினிகளை எடுத்துச் சென்றதை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரி தடுத்து நிறுத்தினார். விமானத்துக்கு இரண்டு மடிக்கணினிகளை எடுத்து செல்லக்கூடாது என்று அமைச்சரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து பயணிகள் 2 மடிக்கணினியை கையில் எடுத்துச்செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை எனவும் தான் நிதி அமைச்சர் என்றும் அந்த அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆங்கிலம் மட்டுமின்றி இந்தியிலும் பேசி விளக்கியுள்ளார். அதனைப் பொருட்படுத்தாத அதிகாரி, இரண்டு மடிக்கணினிகளை கொண்டு செல்லக்கூடாது என்று கூறியதால் வாக்குவாதம் முற்றி பதற்றமான சூழல் நிலவியது.
இதன்பிறகு தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விமான நிலைய உயர் அதிகாரிகள், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் மன்னிப்பு கோரினர். மேலும், வாக்குவாதத்தில் ஈடுபட்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரியும் அமைச்சரிடம் மன்னிப்பு கோரினார். ஒன்றிய அரசுக்கும் தமிழ்நாடு மாநில அரசுக்கும் இடையே கருத்து ரீதியாக பல முரண்பாடுகள் உள்ள காரணங்களால் இது திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தையும் பலர் எழுப்பி வருகின்றனர். இந்தியில் பேசாததால் நீங்கள் இந்தியரா என இதே சென்னை விமான நிலையத்தில் எம்பி கனிமொழியிடம் பெண் காவலர் கேட்டது சர்ச்சையானது. அதனைத் தொடர்ந்தும் இதே போன்ற நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
























