கல்விக்கு வயது தடையே இல்லை என்பதை இக்கால இளைஞர்களுக்கு உணர்த்தும் வகையில் காரைக்காலில் 63 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மருத்துவப்படிப்பான எம்.பி.பி.எஸ். பயின்று அனைவருக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான வினோத் யாதவ் என்பவரது மனைவி தான் இந்த 63 வயதான சுஜாதா ஜடா. இவர்களது மகன் மத்தியப் பிரதேசத்தில் மருத்துவராகப் பணிவுரிந்துவருகிறார்.
ராணுவத்தில் 8 ஆண்டுகள் பணிபுரிந்து அனுபவம் பெற்றுள்ள சுஜாதா, வங்கியிலும் அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் தான் வங்கி அதிகாரி பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்ற சுஜாதாவுக்கு மருத்துவராகி சேவை செய்யவேண்டும் என்ற எண்ணம் உதித்துள்ளது.
இதைத்தொடர்ந்து நீட் தேர்வுக்காக கடும் பயிற்சிகள் செய்து கடந்த ஆண்டு அதில் வெற்றிபெற்ற சுஜாதா, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியிலுள்ள விநாயகா மிஷன் மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்து அனைவரையும் வியக்கவைத்துள்ளார்.
இத்தனை ஆண்டுகள் பணியிலேயே வாழ்வைக் கழித்து ஓய்வு காலத்தில் ஜம்மென்று ஓய்வெடுக்கலாம் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் தள்ளாத வயதிலும் சேவை மனப்பான்மையோடு தனது அயராத முயற்சியால் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ள சுஜாதாவை பலரும் தங்களுக்கு எடுத்துக்காட்டாகப் பார்க்கிறார்கள். கல்வி கற்க வயது ஒரு பொருட்டே இல்லை என்ற உண்மையை சுஜாதா போன்ற திறமைசாலிகள் உடைத்துக்கொண்டே வருவது ஆரோக்யமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் செயலாக அமைகிறது.
மருத்துவமனைகள் இல்லாத தனது கிராமத்தில் சிறிய அளவிலான ஒரு மருத்துவமனையை அமைத்து தேவையுடையோருக்கு சேவை செய்வதே தனது இலக்கு என்று கூறுகிறார் சுஜாதா.


























