உலகிலேயே முதன்முறையாக கொடிய மரபணு கோளாறால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தாயின் கருவறைக்குள்ளேயே வைத்து மூளை அறுவைசிகிச்சை செய்து அக்குழந்தையை காப்பாற்றி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவின் லூசியானா பகுதியின் பேடன் ரூஜ் நகரத்தைச் சேர்ந்த டெரெக் மற்றும் கென்யாட்டா கோல்மன் தம்பதிக்கு திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகிறது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பாக கென்யாட்டா கருவுற்றிருக்கிறார்.
இந்நிலையில், குழந்தை 30 வார கருவாக கென்யாட்டாவின் வயிற்றுக்குள் இருந்த சமயம், பரிசோதனையின் போது குழந்தையின் மூளையின் அடிப்படையில் ஏதோ சரியாக இல்லை என்று மருத்துவர் தெரிவித்துள்ளார். அதாவது, குழந்தைக்கு vein of Galen malformation என்ற குறைபாடு இருந்துள்ளது.
vein of Galen malformation என்பது மூளைக்குள் உள்ள ஒரு அரிய இரத்த நாள அசாதாரணப்போக்காக்கும். இதில் மூளையில் உள்ள தமனிகள் தவறுதலாக தந்துகிகளுக்கு பதிலாக நரம்புகளுடன் நேரடியாக இணைகின்றன. மேலும் இது இரத்த ஓட்டத்தை குறைத்து இதய நோய் பாதிப்பை அதிகப்படுத்துவதாக குழந்தையைப் பரிசோதித்த பாஸ்டன் குழந்தைகள் மருத்துவமனை தெரிவிக்கிறது.
இந்நிலையில் தான் குழந்தையின் தந்தை, குழந்தை பிறப்பதற்கு முன்னதாகவே இந்தப் பிரச்சினையை சரிசெய்யவேண்டி மருத்துவர்களை அணுகியுள்ளார். இதைத்தொடர்ந்து பாஸ்டான் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் மசாசூசெட்ஸ் மருத்துவமனை ஆகியவை இணைந்து கென்யாட்டாவின் கருப்பையைத் திறந்து வளர்ந்துவரும் சிசுவின் மூளையில் தமனிகளைக் கண்டறிந்து இப்பிரச்சினையை அறுவைசிகிச்சை மூலம் சரிசெய்துள்ளனர். இதைத்தொடர்ந்து அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் ஜர்னல் ஸ்ட்ரோக்கில் 34 வாரங்கள் 2 நாட்கள் கர்ப்ப காலத்தில் செய்யப்பட்ட இந்த அறுவைசிகிச்சை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, அறுவை சிகிச்சைக்குப் பின் இரண்டு நாட்களுக்குப் பிறகு பிறந்த டென்வர் கோல்மன் என்ற பெயருடைய அக்குழந்தை, பிறப்பு குறைபாடுகள் எதுவுமின்றி குறைவான சிக்கல்களுடன் 4.2 பவுண்டுகளில் பிறந்துள்ளது. பிறந்து 3 வாரங்கள் கழித்து குழந்தையைப் பரிசோதித்த நிலையில், குழந்தைக்கு எந்தவொரு இரத்தவோட்ட பிரச்சினையும் இல்லை என்று MRI Scan மூலம் தெரியவந்துள்ளது. இது மருத்துவ உலகில் மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.


























