கேரளாவின் முதல் திரும்பி பாடி பில்டர் என்று பாராட்டப்படும் பிரவீன் நாத் தற்கொலை செய்து கொண்டுள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் ’மிஸ்டர் கேரளம்’ பட்டம் வென்ற திருநம்பி பாடி பில்டர் பிரவீன் நாத், திருநங்கை ரிஷானா ஐஷூவை கடந்த காதலர் தினத்தில் திருமணம் செய்துகொண்டார். 2020ம் ஆண்டு கேரளாவின் திருச்சூரில் சிறுபான்மையினரின் பாலியல் உரிமைகளை முன்னிலைப்படுத்தும் ஒரு விழாவில் இந்த ஜோடி முதன்முதலில் சந்தித்த நிலையில், அண்மையில் இவர்கள் திருமண பந்தத்தில் இணைந்தனர்.
இந்நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக பிரவீன் – ரிஷானா தம்பதி பிரியவிருப்பதாக சமூக வலைதளங்களில் தொடர் செய்திகள் வந்ததாகவும், இதனால் இருவரும் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சற்றும் எதிர்பாராத விதமாக பிரவீன் நாத் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது உடல் அங்குள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது தற்கொலைக்கு சமூக வலைதளங்களில் இவர்கள் விவாகரத்து செய்யவிருப்பதாக பரப்பப்பட்ட தகவலே காரணம் என்று கூறப்படுகிறது.
முன்னதாக வலைதளங்களில் இந்த ஜோடி விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வந்ததற்கு பிரவீன் நாத்தின் முகநூல் பதிவே காரணம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து, தற்கொலை செய்துகொள்வதற்கு இரண்டு தினங்கள் முன்னதாக விளக்கமளித்திருந்த பிரவீன், ‘’நானும் எண் இணையும் பிரியவிரும்புவதாக நான் பதிவிட்ட தகவல் நான் மன உளைச்சலில் இருந்தபோது பதிவிட்டது. பிறகு நான் அந்தப் பதிவை நீக்கிவிட்டேன். நான் அப்பதிவை நீக்கியும் அதன் ஸ்கிரீன் ஷாட்டுகள் தொடர்ந்து வலைதளங்களில் வலம்வந்தவண்ணம் உள்ளன’’ என்று கூறியிருந்தார்.
பிரவீன் நாத்தின் இணையர் ரிஷானா, பிரவீன் இறந்த துக்கத்தில் தற்கொலைக்கு முயன்று பின் காப்பாற்றப்பட்டுள்ளார். தற்சமயம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.


























