நம் ஊரில் நிலம், நகை உள்ளிட்டவற்றின் மீது முதலீடு செய்து அதை சில ஆண்டுகள் கழித்து பன்மடங்காக திரும்ப எடுப்பது வழக்கமான ஒன்று. ஆனால், பெண் ஒருவர் ரூ.90 மட்டுமே செலவிட்டு ஒரு வீட்டை வாங்கி தனது சாமர்த்தியத்தால் தற்சமயம் அதை ரூ.4 கோடி மதிப்பிலான வீடாக மாற்றி புருவங்களை உயர்த்தவைத்துள்ளார்.
2019ம் ஆண்டில் மெரிடித் டபோன் என்ற பெண்மணி, இத்தாலியின் சிசிலியில் உள்ள உள்ளூர் கவுன்சில், கைவிடப்பட்ட வீட்டை ரூ.90க்கு ஏலம் விடுவதாக கேள்விப்பட்டுள்ளார். சிசிலி பகுதியை புதுப்பிக்க அங்குள்ள உள்ளாட்சி அமைப்பு வீட்டை ஏலம் விட்டுள்ளது. 1600களில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடத்தில் மின்சாரம், தண்ணீர் என்று எந்த வசதியும் இல்லை. இந்த வீடு தரைத்தளத்திற்கு மேல் கட்டப்பட்ட ஒரு பெரிய அறையைக் கொண்டிருந்தது மற்றும் வீட்டிற்கு அடர்ந்த கூரை இருந்துள்ளது. பிறகு தான் அந்த கட்டிடம் மெரிடித்தின் கொள்ளுத் தாத்தா பிலிப்போ டபோனுக்குச் சொந்தமானது என்று தெரியவந்துள்ளது.
இங்கு தான் மெரிடித்தின் புத்திசாலித்தனம் வேலை செய்துள்ளது. வீட்டை ஏலத்தில் எடுத்த அவர், ரூ.59,628 செலவழித்து, அந்த வீட்டின் கூரையைப் பாதுகாப்பாக அகற்றியுள்ளார். பிறகு, அந்த வீட்டின் பக்கத்திலுள்ள ஒரு காலி வீட்டை ரூ.24.3 லட்சத்திற்கு வாங்கியுள்ளார். பின் இரண்டு வருடங்களில் ரூ.1.9 கோடி செலவில் 3,000 சதுர அடியில், நான்கு படுக்கையறைகள் கொண்ட வீடாக அந்த இரண்டு வீடுகளையும் இணைத்து மெரிடித் உருவாக்கியுள்ளார். மேலும் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் சுவர்களை நிறுவி, மின் இணைப்பு ஆகியவற்றையும் சேர்ந்து அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு வீடாக அதை மாற்றியுள்ளார். தற்சமயம் அந்த வீட்டில் நான்கு குளியலறைகள், ஒரு வெளிப்புற சமையலறை, ஒரு ஹால் மற்றும் ஒரு உணவு உண்ணும் அறை உள்ளது.
இவ்வாறு ரூ.90க்கு ஏலம் எடுக்கப்பட்ட இந்த வீடு எல்லா விதமான வசதிகளையும் கொண்டு தற்சமயம் ரூ.4.10 கோடிக்கு விற்பனையாவதாக மெரிடித் தெரிவித்துள்ளார். சிகாகோவில் நிதி ஆலோசகராகப் பணிபுரியும் மெரிடித் முதலில் இந்த வீட்டை சாதாரண ஒரு தங்கும் வீடுபோல மாற்றலாம் என்றே திட்டமிட்டு வாங்கியுள்ளார். ஆனால் தற்சமயம் அதில் சற்று பணம் செலவழித்து, இப்போது பெரும் மதிப்பிலான ஒரு வீடாக அதை மாற்றியுள்ளதாக மகிழ்ச்சிகொள்கிறார்.


























