அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பெண் ஒருவர், தூக்கியெறியும் குப்பைகளைப் பயன்படுத்தி மாதம் ரூ.4 லட்சம் வரை சம்பாதித்து வியப்பை ஏற்படுத்துகிறார்.
வெரோனிகா டெய்லர் என்ற இந்தப் பெண், தூக்கி எறியப்பட்ட பொருட்களைத் தேடி எடுத்து, பின்னர் அவற்றை விற்பனைக்கு ஏற்றாற்போல் மாற்றி, அதை விற்று தனக்கென ஒரு வாழ்க்கையை நடத்தி வருகிறார். இதை தனது தோழியான லிஸ் வில்சனுடன் பொழுதுபோக்காக ஆரம்பித்ததாகவும், ஆனால் தற்போது அதை ஒரு முழுநேரத் தொழிலாக மாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு தூக்கியெறியப்படும் பொருட்களை WhatNot என்ற செயலியின் மூலம் விற்பனை செய்வதாக வெரோனிகா கூறுகிறார். மக்கள் ஏலம் மூலமாக பொருட்களை வாங்குவதற்காக மொபைலில் லைவ் வீடியோ மூலம் தாங்கள் கண்டுபிடித்த பொருட்களை அவர்கள் பட்டியலிடுகிறார்கள். பெரும்பாலும் ஒரு நிகழ்ச்சிக்கு 100 பொருட்கள் வரை விற்பனை செய்யப்படுவதாக வெரோனிகா தெரிவிக்கிறார். ஏற்கனவே 100% லாபம் ஈட்டுவதால், வாடிக்கையாளர்களால் வழங்கப்படும் எந்த சலுகையையும் அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இதன் மூலம் தொடர்ச்சியாக தங்களிடம் பொருட்கள் வாங்கும் பல வாடிக்கையாளர்களையும் இவர்கள் உருவாக்கியுள்ளார்களாம்.
வெரோனிகாவும் லிஸும் 2022ல் இதனைத் தொடங்கினர். இதற்காக, வெரோனிகா கலிபோர்னியாவில் உள்ள தனது முந்தைய வீட்டிலிருந்து பென்சில்வேனியாவில் லிஸுடன் தங்கி குப்பைகள் மூலம் சம்பாதிப்பதை முழுநேரத் தொழிலாக மாற்றிக்கொண்டார். பொருட்களின் பிராண்டுகளைப் பற்றி அதிகம் தெரியாத பல முதியவர்கள் அவர்கள் வேலைசெய்யும் கடைகளிலிருந்து அவற்றை தூக்கி எறிந்து வருவதால் இதன் மூலம் அதிக பணம் ஈட்டமுடிவதாக அவர் தெரிவிக்கிறார். இந்தத் தொழிலில் பென்சில்வேனியா தனது வாழ்வை மாற்றிய ஒரு இடமாக விளங்குவதாக கூறும் வெரோனிகா, குப்பைகளின் விற்பனை மூலம் வரும் லாபத்தை தானும் லிஸும் 50/50 என்று பிரித்துக்கொள்வதாகக் கூறுகிறார்.


























