அமெரிக்க நிறுவனம் ஒன்று மனிதர்களின் மூளையில் 50 சிப்களை பொருத்தியுள்ளது. இதன் மூலம் பக்கவாதம், மனச்சோர்வு மற்றும் உடல் செயலிழப்பு பிரச்சினைகளான கண்பார்வையிழப்பு, காதுகேளாமை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வில் பெருமளவில் முன்னேற்றத்தை ஏற்படுத்தமுடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
NeuroPortArray என்று அழைக்கப்படும இந்த சாதனமானது, அமெரிக்காவின் உட்டா பகுதியின் சால்ட் லேக் சிட்டியில் உள்ள BlackrockNeurotech என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்த சிப் பொருத்தப்பட்டவர்கள் ரோபோவின் கைகள் மற்றும் மின்சார சக்கர நாற்காலிகளை தங்கள் மனதால் கட்டுப்படுத்த முடியும் என்பதே இந்தச் சாதனம் பொருத்தப்பட்டதற்கான முக்கிய நோக்கம் என்று இதைத் தயாரித்த நிறுவனம் தெரிவிக்கிறது.
இதற்கான தேவை, இதன் எதிர்கால வளர்ச்சி மற்றும் இது ஏன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது? ஆகியவற்றைப் பற்றி விரிவாக விளக்கும் இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் மார்கஸ் கெர்ஹார்ட், மனிதர்களுக்கு நேரடியாக மூளையில் இதுபோன்ற உள்வைப்புகளைச் செலுத்தும் ஒரே நிறுவனம் தாங்கள்தான் என்று கூறுகிறார்.
இதுகுறித்து மேலும் தெரிவிக்கும் அவர், ’’மனிதர்களின் மூளையில் பொருத்தக்கூடிய எங்கள் நிறுவனத்தின் இந்த சிப்களானது மக்களை நேரடியாக கணினிகளுடன் இணைக்கவும், ரோபோவின் கைகள் மற்றும் சக்கர நாற்காலிகளைக் கட்டுப்படுத்தவும், வீடியோ கேம்களை விளையாடவும், இன்னும் சில உணர்வை மீட்டெடுக்கவும் உதவுகின்றன. இதெல்லாம் வெறும் அவர்களின் மூளையின் சமிக்ஞைகளைப் பயன்படுத்தி மட்டுமே சிப்கள் செய்துமுடிக்கின்றன.
இதயப் பிரச்சனை உள்ளவர்களுக்கு இதயமுடுக்கிகள்(Pacemakers) கிடைப்பது போல், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நமது உள்வைப்புகள் எளிதாகக் கிடைக்கும் என்பதே எங்களின் தொலைநோக்கு லட்சியம். இது உண்மையில் மிகவும் சுவாரஸ்யமான துறையாகும். எங்கள் முயற்சிகள் மட்டும் அங்கீகாரத்தைப் பெற்று முறையாக சோதிக்கப்பட்டால், இது தேவைப்படுபடுவோரின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்’’ என்று கூறுகிறார்.


























