தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரும், நடிகருமான மனோபாலா தன்னுடைய 69வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார்.
அண்மைக்காலமாக தமிழ் சினிமாவின் மூத்த நகைச்சுவை நடிகர்கள் உயிரிழந்துவருவது தொடர்கதையாகியுள்ளது. மரணம் என்பது இயற்கையின் நியதி என்றாலும் மக்களால் பெரிதும் விரும்பப்படும் கலைஞர்கள் இவ்வாறு ஒன்றன்பின் ஒருவராக உயிரிழப்பது கனம்கூட்டும் நிகழ்வுகளாக உள்ளது.
இயக்குநராக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்திருந்தாலும் தன்னுடைய தனித்தன்மையான நகைச்சுவைத் திறனால் பலரை சிரிக்கவும் ரசிக்கவும் வைத்தவர் மனோபாலா. நடிக்கத் துவங்கிய காலகட்டத்தில் ஒன்றிரண்டாக படங்களில் தலைகாட்டிவந்த இவர், நகைச்சுவை பாணியில் நடிக்கத் துவங்கியதும் இவர் இல்லாத படங்கள் வருவது அபூர்வமாகிப்போகும் அளவிற்கு எல்லா படங்களிலும் தோன்றி சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்தார். மேலும் தனது வேஸ்ட்பேப்பர் யூடியூப் சேனல் மூலம் பிரபலங்களைப் பேட்டிகண்டும் வந்தார். இவ்வாறு தனது ஒல்லி பெல்லி உடலால் எப்பொழுதும் துருதுருவென்று இயங்கிக்கொண்டிருக்கும் மனோபலாவின் மரணத்திற்கு என்ன காரணம்?
மனோபாலாவுக்கு அண்மையில் லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை தரப்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டில் அவர் உடல் நலத்துடன் ஓய்வில் இருந்துள்ளார். இந்நிலையில் தான் அவருக்கு கல்லீரலில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதுசார்ந்து 15 நாட்கள் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளது. இதனிடையே வீட்டில் ஓய்வில் இருந்த மனோபாலா திடீரென்று இன்று அவரது வீட்டில் காலமாகியுள்ளார்.
அண்மையில் தான் தமிழ் சினிமாவின் பன்முகக் கலைஞரான மயில்சாமி மாரடைப்பு காரணமாக மரணமடைந்த நிலையில், சிறந்த இயக்குநரும் நடிகருமான மனோபாலா உயிரிழந்த செய்தி சினிமா வட்டாரத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்திவருகின்றனர். அவரது இறுதிச்சடங்கு நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


























