தனது கணவர் முகமது ஷமி பல விலைமாதர்களுடன் தவறான முறையில் உறவுவைத்துள்ளதாக அவரது மனைவி ஹாசின் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் என்று போற்றப்படுபவர் கிரிக்கெட் வீரர் முகமது ஷமி. இவருக்கும் இவரது மனைவி ஹாசினுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக தொடர் பிரச்சினைகள் இருந்துவருவதாகக் கூறப்படுகிறது. ஷமி தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும் அவரிடமிருந்து விவாகரத்து கோரி ஹாசின் கடந்த 2018ம் ஆண்டு கொல்கத்தா குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன் விசாரனை நடைபெற்றுவருகிறது.
இதைத்தொடர்ந்து ஷமி மீது பல்வேறு பரபரப்புக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஹாசின் உச்சநீதிமன்றத்தில் மற்றுமொரு மனுவைத் தொடர்ந்துள்ளார். இந்த மனுவில் முன்னதாக விவாகரத்து கோரி தொடரப்பட்ட வழக்கில் இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று கூறியுள்ள ஹாசின், ஷமி பல விலைமாதர்களுடன் கள்ளத்தனமாக தொடர்ந்து உறவுவைத்துக்கொள்வதாக தனது குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு முறையும் கிரிக்கெட் சார்ந்து நண்பர்களுடன் வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் பயணப்படும்பொழுது இவ்வாறு விலைமாதர்களுடன் அவர் உறவு வைத்துள்ளதாகவும், இன்னமும் இதை அவர் தொடர்வதாகவும் ஹாசின் அவர் மீது குற்றம்சுமத்தி மனு அளித்துள்ளார். மேலும் ஷமி தனக்கு அளிக்கும் ஜீவனாம்சம் போதவில்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். ஹாசின் மற்றும் அவரது மகள் ஆகியோரின் செலவிற்காக ஷமி மாதம் ரூ.1.3 லட்சம் ஜீவனாம்சமாகத் தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


























