கர்நாடக சட்டமன்றத் தேர்தல் மே 10ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோதி அங்கு சாலை மார்க்கமாக மக்களைச் சந்திக்கவேண்டி அங்குள்ள கலபுராகி பகுதியில் ஹம்னாபாத் ரிங் சாலையிலிருந்து சர்தார் வல்லபாய் பட்டேல் சவ்க் வரை வாகனத்தில் பயணித்தார்.?
இந்நிலையில், ஹெலிகாப்டர் மூலம் கலபுராகியை அடைந்த பிரதமர் மோதி, சாலைவழிப் பயணத்தை தொடங்குவதற்கு முன்னதாக அப்பகுதியிலுள்ள குழந்தைகளைச் சந்தித்து அவர்களுடன் உரையாடி அவர்களுக்கு யோகா சொல்லிக் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோதி குழந்தைகளைத் தொடாமல் வேலிக்குள் அடைத்துப் பேசி தீண்டாமையைக் கடைபிடித்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
முன்னதாக பிரதமர் மோதி குழந்தைகளைச் சந்திக்கும்போது அவருடன் பாதுகாப்பு அதிகாரிகள் நிற்கின்றனர். வேலிக்கு வெளியே இருந்த குழந்தைகள் மோதியைப் பார்த்ததும் அவருடன் பேசவும் அவருக்குக் கை கொடுக்கவும் ஓடிவருகின்றனர். ஆனால் இறுதிவரை பிரதமர் மோதி அவர்களைத் தொடவேயில்லை என்றும் ஒருவருக்குக் கூட கைகொடுக்கவில்லை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. மேலும் பாதுகாப்பு அதிகாரிகள் கைகொடுக்கும் குழந்தைகளின் கையைத் தொடர்ந்து தடுத்துக்கொண்டே நிற்கிறார். இதை பிரதமர் மோதி கண்டும் எதுவும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இதையடுத்து, மோதி வசதிபடைத்தோரிடம் அன்யோன்யமாக தொட்டுப் பேசுவதாகவும், அத்தனை அன்புடன் வந்த ஏழைக் குழந்தைகளைத் தொட தயக்கப்பட்டு நவீன தீண்டாமையைக் கடைபிடிப்பதாகவும், தன் அருகில் ஒருவர்கூட வரக்கூடாது என்ற உள்நோக்கத்துடன் வேலி போட்டு அவர்களைத் தடுத்துள்ளதாகவும், இதற்கு முன்னதாக மோதி பணக்காரர்களைச் சந்தித்து அவர்களுடன் கைகுலுக்கும் புகைப்படங்கள், இந்திய முன்னாள் பிரதமர் நேரு குழந்தைகளுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் ஆகியவர்றை இணையத்தில் பகிர்ந்து அவருக்கெதிராக இணையவாசிகள் கேள்வியெழுப்பிவருகின்றனர்.


























