அமெரிக்காவின் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு மனிதர்களின் எண்ணங்களைப் படிக்கக்கூடிய AI மாதிரியை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து Nature Neuroscience இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, செமாண்டிக் டிகோடர் எனப்படும் AI அமைப்பு, மூளையின் செயல்பாட்டை எழுத்துவடிவில் மொழிபெயர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற மாணவர் ஜெர்ரி டாங் தலைமையில், ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் மற்றும் கணினி அறிவியலின் உதவிப் பேராசிரியர் அலெக்ஸ் ஹுத்-உடன் இணைந்து இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது;. இதில் கூகுளின் Bard மற்றும் OpenAI-ன் ChatGPT-ஐ இயக்கும் மின்மாற்றி மாதிரி அடிப்படையாகக் கொள்ளப்பட்டது.
விஞ்ஞானிகள் தங்களது சமீபத்திய கண்டுபிடிப்பு, பக்கவாதம் அல்லது சில வகையான உடல்குறைபாடு உள்ளவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறார்கள். புதிதாக உருவாக்கப்பட்ட இந்த AI தொழில்நுட்பத்தின் மூலம் மூளையின் செயல்பாடுகளை எழுத்து வடிவில் மொழிபெயர்க்க முடியும். அதாவது, நரம்பியல் அல்லது மருத்துவ அறிவியலின் வரலாற்றில் இதுவரை முயற்சிக்கப்படாத ஒரு நபரின் எண்ணங்களை எழுத்துவடிவில் மாற்றி படிக்க AI அனுமதிக்கிறது.
ஆய்வின் ஒரு பகுதியாக, எம்ஆர்ஐ இயந்திரங்களில் மூன்று பேர் அமர்த்தப்பட்டு, அவர்கள் கதைகளைக் கேட்கும்படி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் பெரிய திருப்புமுனையாக, விஞ்ஞானிகள் எந்தவொரு மூளை உள்வைப்பின் உதவியும் இல்லாமல் அதில் அமர்த்தப்பட்டவர்களின் எண்ணங்களை எழுத்துவடிவில் உருவாக்கியதாக கூறுகிறார்கள். எண்ணங்களைப் படிக்கும் தொழில்நுட்பம் அவர்களின் எண்ணங்களின் முக்கியப் பகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது; மாறாக எண்ணங்களை முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இதில் ஆட்படுத்தப்படும் நபர் ஒரு கதையைக் கேட்கும்போது அல்லது தானாக ஒன்றைக் கற்பனை செய்யும் போது AI அமைப்பு அவற்றை எழுத்துவடிவில் உருவாக்க முடியும். மேலும் AI அமைப்பிற்கு இதுசார்ந்து முழுமையாக பயிற்சி அளித்தவுடன் இது சாத்தியமாகும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆயினும், மனிதர்கள் சிந்திக்கும் விஷயங்களின் சுதந்திரத்தன்மையை பறிக்கும் ஆபத்தும் இதில் உள்ளதாக விஞ்ஞானிகள் கவலை கொள்கின்றனர்.


























