திருமணத்திற்கு முந்தைய, திருமண மற்றும் மகப்பேறு நிகழ்வுகளுக்கு பலவிதமான, வித்தியாசமான முறைகளில் எடுக்கப்படும் போட்டோஷூட் புகைப்படங்களை நாம் காண்பதுண்டு. ஆனால், இங்கு இன்னும் சற்றுவித்தியாசமாக விவாகரத்து செய்ததைக் கொண்டாடும் வகையில் ‘விவாகரத்து போட்டோஷூட்’ நடத்திய ஒரு பெண்ணின் புகைப்படங்கள் இணையத்தில் வலம்வந்துகொண்டிருக்கின்றன.
லாரன் ப்ரூக் என்ற பெயரைக் கொண்ட அந்தப் பெண், கொண்டாட்டக் களையுடன் சிவப்பு நிறப் புதுத்துணிகளை அணிந்தவாறு இந்த விவாகரத்து போட்டோஷூட்டை நடத்தியுள்ளார். இவர் பதிவிட்டுள்ள புகைப்படங்களில் ஒன்றில் அவர் தனது திருமண நாள் துணியை தீயிட்டு கொளுத்துகிறார். மற்றொன்றில் கணவருடன் தான் எடுத்துக்கொண்ட ஃப்ரேம் போட்ட போட்டோவை கண்ணாடி உடைந்துபோகும் அளவிற்கு தனது ஹீல்ஸ் செருப்பால் மிதித்து உடைக்கிறார்.
மேலும் ஒரு புகைப்படத்தை கிழிக்கிறார் மற்றும் மற்றொன்றை கொளுத்துகிறார். பின் மது அருந்தி அதைக் கொண்டாடுகிறார். தனது மற்றுமொரு புகைப்படத்தில், “நான் உங்களுக்கு சிறந்ததையே விரும்புகிறேன். ஆனால் உங்களிடம் ஏற்கனவே அந்த சிறந்த ஒன்று இருக்கிறது” என்று எழுதப்பட்ட ஒரு அட்டையைக் காண்பிக்கிறார். இந்நிலையில், இந்த போட்டோஷூட் தொடர்புடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன. இதுகுறித்து பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டுவருகின்றனர்.
’’நான் இந்தப் பெண்ணின் செய்கையை விரும்புகிறேன். இது இவருக்கு நல்லதாக இருக்கும். நிச்சயமாக இப்பெண் தற்சமயம் சுதந்திரமாக இருப்பதாக உண்ர்வாள்’’, ’’இந்த உறவில் யார் பிரச்சினைக்குரியவராக இருந்திருப்பார் என்று எனக்கு ஆச்சர்யமாக உள்ளது’’, ’’அவள் இதற்கு முன்னதாக கொடுமையான, துன்புறுத்தக்கூடிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம். எனக்கு அவளது முந்தைய வாழ்க்கை எப்படியிருந்தது என்று தெரியாவிட்டாலும், அவள் இதற்குப் பிறகு மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்’’ போன்ற கருத்துகளை நெட்டிசன்கள் இந்த போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்களுக்குக் கீழே பதிவிட்டுவருகின்றனர். இவை போக, ’’இவளால் இவரது கணவர் தப்பித்துக்கொண்டார்’’ போன்ற வசவுக் கருத்துகளும் இதில் அடக்கம்.


























