உச்சநீதிமன்றத்தில் தன்பாலினத் திருமணங்களை அங்கீகரிக்கக்கோரும் மனுவின் விசாரணை நடைபெற்றுவருகிறது. மத்திய அரசு தனது விவாதங்களில் இதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்ற ரீதியில் வாதிட்டுவருகிறது. ஆனாலும், இந்த மனுவுக்கு ஒருசேர ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குரல்கள் நாடெங்கிலும் கொடுக்கப்பட்டுவருகின்றன. இன்னும் இதன் தீர்ப்பு வழங்கப்படவில்லை.
இந்நிலையில், சர்ச்சைப் பேச்சுகளுக்கு பெயர்பெற்ற பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் தன்பாலினத் திருமணங்கள் குறித்த தனது கருத்தை துணிவுடன் தெரிவித்துள்ளார். அண்மையில் ஹரித்வாரில் உள்ள தக்ஷின் காளி கோவிலில் தரிசனம் செய்ய வந்திருந்த சமயம் அவரிடம் தன்பாலின திருமணங்கள் உள்ளிட்ட பல கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அப்பொழுது அதற்கு பதிலளித்த அவர், ’’திருமணம் என்பது இருமனங்கள் இணையும் ஒரு நிகழ்வு. அப்படி இரண்டு தனிப்பட்ட நபர்களின் மனம் இணைந்து அவர்கள் ஒன்றுசேர எண்ணுகையில் அதுபற்றி நான் என்ன கருத்து கூற முடியும்?’’ என்று கூறினார்.
இந்தக் காணொலியை மேற்கோள்காட்டி இந்தி திரையுலக இயக்குநரும், LGBTQ ஆதரவாளருமான அபூர்வா அஸ்ரானி தனது ட்விட்டர் பக்கத்தில், ’’பெரும்பாலான சினிமா நட்சத்திரங்கள் பேச தயக்கப்படும் ஒரு விஷயத்தை துணிவுடம் கங்கனா பேசியுள்ளார்’’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து, ’’ஒருபாலின உறவு பற்றிய படங்களில் நடிப்பவர்கள் கூட இதுபற்றி துணிச்சலுடன் கருத்து தெரிவிக்க பயப்படுகையில், இதுகுறித்து தைரியமாக பேச கங்கனா போன்ற நடிகைகளாலேயே முடியும்’’ என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அண்மையில் இதே தன்பாலின திருமணங்கள் குறித்து கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில், ’’நீங்கள் ஒரு ஆணாக இருந்தாலும்/ பெண்ணாக இருந்தாலும் அல்லது உங்கள் பாலினம் வேறு ஏதாவதாக இருந்தாலும் அது எவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது. இதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். நவீன உலகில் நடிகைகள் அல்லது பெண் இயக்குனர்கள் போன்ற வார்த்தைகளை கூட நாங்கள் பயன்படுத்துவதில்லை. மாறாக, அவர்களை நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் என்று பொதுவான பெயர்களுடன் அழைக்கிறோம். உலகில், நீங்கள் வெளியில் செய்யும் செயல்கள் தான் உங்களது அடையாளமே தவிர உங்கள் படுக்கையறையில் நீங்கள் செய்வது உங்கள் அடையாளமல்ல’’ என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


























