1980 முதல் 2015 வரை நடைமுறையில் இருந்த சீனாவின் ஒரு குழந்தை கொள்கை அதன் மக்கள்தொகை வளர்ச்சியை கடுமையாக பாதித்துள்ளது. தற்சமயம் அந்நாடு ஆபத்தான முறையில் குறைந்த பிறப்பு விகிதத்தையும், முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பையும் எதிர்கொண்டுவருகிறது. இந்நிலையில் சீனா மக்கள்தொகை எண்ணிக்கையை மேம்படுத்த பல முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது. இந்த நிலையில் தான் அங்குள்ள அரசு அதிகாரிகள், திருமணமாகாத பெண்களுக்கு IVF எனப்படும் கருத்தரித்தல் முறைமூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதியளிக்க சமீபத்தில் அரசிடம் முன்மொழிந்துள்ளனர்.
சீனாவில் குழந்தை பெற்றுக்கொள்ளும் வரம்பு மூன்றாக உயர்த்தப்பட்டுள்ளது அந்நாட்டில் பிரச்சினைக்குரியதாகப் பார்க்கப்படுகிறது. கல்வி, குழந்தையின் மருத்துவச் செலவுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அங்குள்ள மக்கள் திருமணம் செய்துகொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லையாம். மேலும், திருமணமானவர்கள் கூட குழந்தையை பெற்றுக்கொள்வதற்கும் அதை வளர்ப்பதற்கும் தாங்கள் பொருளாதார ரீதியாக சக்திபடைத்தோராக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்களாம்.
இதன் காரணமாக அங்குள்ள அரசுத் தரப்பினர் சீனர்களை குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஊக்குவித்து வருகின்றனர். மேலும் தங்கள் நாட்டின் மக்கள் தொகையைப் பெருக்க திருமணமாகாத பெண்களை IVF எனப்படும் In Vitro Fertilization முறைப்படி கருத்தரிக்கவும், குழந்தை பெற்றுக்கொள்ளவும் வலியுறுத்திவருகின்றனர். அதாவது, இந்த முறையில் ஆணின் விந்தணு பெண்ணின் கருமுட்டைக்குள் செலுத்தப்பட்டு குழந்தை உருவாக்கப்படும்.
முன்னதாக திருமணமான பெண்களுக்கு மட்டுமே IVF முறை கருத்தரித்தலுக்கு சீனாவில் அனுமதியளிக்கப்பட்டுவந்த நிலையில், தற்சமயம் திருமணமாகாத பெண்களுக்கும் அனுமதியளிக்க அதிகாரிகளால் வலியுறுத்தப்பட்டுவருகிறது. ஆயினும் சீன அரசாங்கம் இதனை அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை. ஆனாலும் கூட, அங்குள்ள சில சிகிச்சையகங்களில் திருமணமாகாத பெண்களுக்கு இந்த சிகிச்சை தொடங்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல நகரங்களில் இந்த சிகிச்சைக்கான முன்பதிவு செய்யப்பட்டுவருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த அறிவிப்பு அங்கு வெளியிடப்பட்டதிலிருந்து பல பெண்களும் ஆர்வத்துடன் இந்த சிகிச்சையை மேற்கொண்டுவருகிறார்களாம். பல கிளினிக்குகளில் பெண்களின் கூட்டம் அலைமோதுகிறதாம். அங்கு பெண்கள் திருமணம் செய்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டாததாலும், IVF சிகிச்சைக்கு அங்கு குறைந்த கட்டணமே ஆகிறது என்பதாலும் இதற்கு அங்கு வரவேற்பு கிடைத்துள்ளது. என்றாலும் கூட இந்த முறைப்படி மக்கள் தொகை எண்ணிக்கையில் சிறிய அளவிலான மாற்றத்தையே ஏற்படுத்தமுடியும் என்று அங்குள்ள நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


























