அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தின் வெளியேற்றம் மற்றும் தலிபான் கையகப்படுத்தல் ஆகியவற்றால் வறுமையில் உள்ள ஆப்கானியர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காகி 34 மில்லியனாக அதிகரித்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (United Nations Development Programme) அண்மையில் 34 மில்லியன் ஆப்கானியர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிப்பதாக மதிப்பிடும், 2022 தரவுகளின் ஒரு புதிய மதிப்பீட்டை வெளியிட்டது. இந்த எண்ணிக்கை 2020ல் 15 மில்லியனாக இருந்தது.
ஆப்கானிஸ்தானுக்கான சமகால மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவு எதுவும் இல்லையென்றாலும், ஐ.நா 40 மில்லியன் மக்கள்தொகை என்ற மதிப்பீட்டைப் பயன்படுத்தி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது நாட்டின் 85% பேர் வறுமையில் இருப்பதாக இதன் மூலம் கணிக்கப்பட்டுள்ளது.
வறுமையின் பிடியிலிருந்து நீங்க சிலர் தங்கள் வீடுகள், நிலங்கள் அல்லது வருமானம் தரும் சொத்துக்களை விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக UNDP அறிக்கை கூறுகிறது. மற்ற சிலரோ தங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களையே வறுமையின் காரணமாக குழந்தை தொழிலாளர்களாகவும், இளம் பெண்களை திருமணம் செய்துகொடுத்தும் வறுமையிலிருந்து விடுபடப் பாடுபடுகின்றனராம்.
ஆப்கானிஸ்தானுக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் உதவி குறையுமேயானால், அதீத வறுமையின் படுகுழியில் ஆப்கன் விழக்கூடும் என்று ஆப்கானிஸ்தானில் உள்ள UNDP குடியுரிமை பிரதிநிதி அப்துல்லா அல் தர்தாரி ஒரு அறிக்கையில் தெரிவிக்கிறார்.


























