கல்லூரிப் படிப்பிலோ, பள்ளிப் படிப்பிலோ மதிப்பெண் குறைவாக பெற்றவர்களுக்கு வாழ்க்கை குறித்த தன்னம்பிக்கையை அளிக்க பலரும் ’மதிப்பெண் உன் வாழ்க்கையை தீர்மானிக்காது’ என்ற வசனங்களைக் கூறி தேற்றுவதுண்டு. ஆனால், போகிற போக்கைப் பார்த்தால் மதிப்பெண்ணை வாழ்க்கையின் சில அன்றாடத் தேவைகளுக்காகவே அதிகம் எடுக்கவேண்டியிருக்கும் போலுள்ளது. அப்படித்தான் இங்கு ஒரு நிகழ்வு நம்மை ’இப்படியெல்லாமா நடக்குது?’ என்ற ரீதியில் வாயடைக்கவைத்துள்ளது.
பொதுவாக, திருமணமாகவில்லை, குடும்பத்தில் அதிக நபர்கள் உள்ளனர், இவர்கள் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை, நேரத்திற்கு வரமுடியாத வேலை செய்பவர்கள் போன்ற எத்தனையோ காரணங்களுக்காக வாடகைக்கு வீடு மறுக்கப்படுவதுண்டு. ஆனால், இங்கு ஒருவருக்கு மதிப்பெண் குறைவாக எடுத்த காரணத்தால் வீடுவாடகைக்கு விட மறுக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் யோகேஷ் என்ற நபர் வாடகைக்கு வீடுதேடி அலைந்துள்ள நிலையில், இதற்காக வீடு தேடித்தரும் பிரிஜேஷ் என்ற புரோக்கரை அணுகியுள்ளார். அவரும், ஒரு வீட்டின் உரிமையாளர் வீடு தர சம்மதித்துவிட்டதாகவும், யோகேஷின் லிங்கிட்-இன் மற்றும் ட்விட்டர் அக்கவுண்டுகளையும், பணிபுரியும் நிறுவனத்தின் அப்பாயின்மெண்ட் ஆர்டர் மற்றும் 10,12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களையும் அனுப்பக் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவரது சுயவிவரக் குறிப்பு ஒன்றையும் கேட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து அத்தனை விவரங்களையும், சான்றிதழ்களையும் பிரிஜேஷுக்கு அனுப்பிவிட்டு ஏப்ரலின் இறுதியில் வீட்டை மாற்றிடலாம் என்று தயாராக இருந்த யோகேஷுக்கு அதிர்ச்சித் தகவல் ஒன்று காத்திருந்துள்ளது. அதாவது, வீட்டின் உரிமையாளர் யோகேஷின் மதிப்பெண் சான்றிதழை ஆராய்ந்ததாகவும், அதில் அவர் 12ம் வகுப்பில் 75% மதிப்பெண்களே பெற்றிருப்பதாகவும், 90% மதிப்பெண் பெற்றாலே வீடு தருவதாகக் கூறி மறுத்துவிட்டதாகவும் பிரிஜேஷ் தெரிவித்துள்ளார்.
இதுசார்ந்து இருவருக்கும் நிகழ்ந்த வாட்ஸ் அப் உரையாடலின் ஸ்கிரீன் ஷாட்டுகள் இணையத்தில் வலம்வந்துகொண்டிருக்கின்றன. வீடு வாடகைக்கு கிடைப்பதற்குக் கூட மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படுவது நகைப்பையும், மற்றொரு பக்கம் அதிர்ச்சியையும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.




























