தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடையே பிரபலமானவர் வனிதா விஜயகுமார். நடிகர் விஜயகுமாரின் மகளான இவர், குடும்பத்துடன் ஏற்பட்ட கருத்துவேறுவாடு காரணமாக குடும்பத்தாரிடம் இருந்து விலகி தனியாக வாழ்ந்துவருகிறார்.
முன்னதாக சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சினிமாவிற்கு பெரிய இடைவெளி விட்டிருந்த அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய பங்கேற்பாளராகப் பார்க்கப்பட்டு மீண்டும் கவனம் பெறத் துவங்கினார். பேட்டிகளிலும், செய்தியாளர் சந்திப்புகளிலும் கறாராகவும், யாரையும் எதிர்த்துத் துணிச்சலுடன் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்ற பாணியில் பேசுவதாலும் அவ்வப்போது இணையம் முழுக்க இவர் குறித்த செய்திகளே நிரம்பியிருக்கும்.
அப்படி இணையவாசிகளுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது இவரது மூன்றாவது திருமணம். முதல் கணவர் ஆகாஷ் மற்றும் இரண்டாவது கணவர் ஆனந்த் ஜெய் ராஜன் ஆகியோரைப் பிரிந்த நிலையில், தனது சமையல் யூடியூப் சேனலுக்கு உறுதுணையாக இருந்த பீட்டர் பால் என்பவரை காதலித்து, விரும்பி திருமணம் செய்துகொண்டார்.
யார் கண் பட்டதோ… பலரது வாழ்த்துகளுடன் விமரிசையாக நடைபெற்ற வனிதா விஜயகுமார் – பீட்டர் பால் திருமணம் முறிந்தது. முன்னதாக, திருமணமான சில நாட்களில் வனிதாவும் பீட்டரும் பிரிந்துவாழ்வதாக செய்திகள் வெளியான நிலையில், பீட்டர் அதிகம் குடிப்பதாகவும், தனது பேச்சுக்கு மதிப்பளிப்பதில்லை என்றும், அவரது உடல்நிலை பாதிப்படைந்து அதிக பணம் செலவு செய்தும் குடி மற்றும் புகைப்பழக்கத்திலிருந்து பீட்டர் மீளமறுப்பதாகவும், இதனால் தாங்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ வீடியோ வெளியிட்டு வனிதா விளக்கம் கொடுத்தார். தொடர்ந்து தனது ஜவுளி தொழில் மற்றும் பிற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிசியாக உழைத்து வருகிறார் வனிதா.
இந்நிலையில், திடீர் நிகழ்வாக, மது மற்றும் புகைப்பழக்கத்தின் காரணமாக உடல்நிலை மோசமாகி சிகிச்சையிலிருந்துவந்த வனிதாவின் முன்னாள் கணவர் பீட்டர் பால் மரணமடைந்துவிட்டதாக தகவல்கள் இணையத்தை நிரப்பிவருகின்றன. இதுகுறித்து வனிதா விஜயகுமார் எதுவும் கருத்தோ அல்லது இரங்கல் பதிவோ வெளியிடவில்லை. தொடர்ந்து, உயிரிழந்த முன்னாள் கணவரின் உடலைச் சென்று நேரில் பார்த்து வனிதா அஞ்சலி செலுத்துவாரா அல்லது வெறுப்பின் காரணமாக இறுதிச்சடங்கிற்கு செல்ல மறுப்பாரா என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை.


























