மருத்துவமனையில் கருத்தடை அறுவைசிகிச்சை செய்துகொண்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்த நிலையில், நீதிமன்றம் அரசுக்கு நூதன முரையில் தண்டனை அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வாசுகி என்ற இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பெண், கடந்த 2013ம் ஆண்டு தூத்துக்குடியிலுள்ள அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். ஆயினும் கருத்தடையை மீறி 2014 மார்ச்சில் கர்ப்பமான வாசுகிக்கு 2015 ஜனவரியில் மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வாசுகி உயர்நீதிமன்றத்தில், மருத்துவர்களின் அலட்சியத்தாலேயே கருத்தடை சிகிச்சை தனக்கு சரியான முறையில் செய்யப்படவில்லை என்று கூறி வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், இதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிபதி, குடும்பக் கட்டுப்பாடு என்பது அரசு மருத்துவமனைகள் மூலம் செயல்படுத்தப்படும் தேசிய திட்டம் என்றும், இது போன்ற அலட்சியத் தன்மையுடைய மருத்துவர்களால் இத்திட்டம் நாசம் செய்யப்படுவதாகவும் கண்டித்தார்.
மேலும், இந்த வழக்கைத் தொடுத்துள்ள மனுதாரர் தாமாக முன்வந்து குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ள ஆர்வம் காட்டியதாகவும், மருத்துவரின் முறையற்ற செயல்திறன் மூலம் இந்த விஷயம் தவறாகிவிட்டதகாவும், மருத்துவரின் அலட்சியம் ஒதுக்கித்தளள முடியாதபடி முக்கிய கவனம் பெறுவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, இந்த கவனக்குறைவில் ஈடுபட்ட அரசு மருத்துவமனைக்கு எதிராக, அரசாங்கம் பாதிக்கப்பட்ட வாசுகிக்கு ரூ.3 லட்சம் வழங்கவேண்டும் என்றும், வாசுகியின் 3வது குழந்தைக்கு தனியார் அல்லது அரசுப் பள்ளியில் இலவச கல்வி வழங்கவேண்டும் என்றும், கல்வி சார்ந்து தேவைப்படும் புத்தகம், சீருடைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அரசாங்கமே வழங்கவேண்டும் என்றும், அக்குழந்தை தனது பட்டப்படிப்பை முடிக்கும் 21 வயதுவரை உணவு மற்றும் பிற எல்லா தேவைகளுக்காகவும் மாதம் ரூ.10,000 வீதம் வருடத்திற்கு ரூ.1,20,000 செலுத்தவேண்டும் என்றும் நூதன முறையில் தண்டனை அறிவித்துள்ளது.


























