தொண்டை புற்றுநோய்க்கு உடலுறவின் ஒரு பகுதியான வாய்வழிப் புணர்ச்சி முக்கியக் காரணமாக அமைவதாக புதிய ஆய்வின் மூலம் அதிர்ச்சிகரத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் புற்றுநோய் மற்றும் மரபணு அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஹிஷாம் மெஹன்னாவின் கூற்றுப்படி, human papilloma virus எனப்படும் மனித வைரஸ் இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் அதிக துணைகளுடன் உடலுறவு கொள்வதும், முக்கியமாக வாய்வழிப் புணர்ச்சியில் ஈடுபடுவதும் தான் என்று அவர் கூறுகிறார்.
அமெரிக்கன் கேன்சர் சொசைட்டியின் கூற்றுப்படி, 2015 மற்றும் 2019 ஆண்டுகளுக்கிடையே பெண்களில் 1.3% மற்றும் ஆண்களில் 2.8% பேருக்கு ஆண்டுதோறும் Oropharyngeal cancer எனப்படும் ஒரு வகை தொண்டை புற்றுநோய் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தேசிய பொது சுகாதார நிறுவனமான Centers for Disease Control and Prevention(CDC) கணக்கீட்டின்படி, 70% Oropharyngeal புற்றுநோய், வாய்வழிப் புணர்வால் human papillomavirus எனப்படும் HPV மூலம் பரவுவதாகவும், இது உள்நாக்கின் பக்கவாட்டுத் தசைகளையும், நாக்கையும், தொண்டையின் பின்புறத்தையும் பாதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021ல் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், 10 அல்லது அதற்கு மேற்பட்ட துணைகளுடன் வாய்வழிப் புணர்ச்சியில் ஈடுபடுவோருக்கு HPV- தொடர்பான வாய் மற்றும் தொண்டை புற்றுநோய்களை உருவாக்கும் வாய்ப்பு நான்கு மடங்கு அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
15 முதல் 19 வயதுக்குட்பட்ட பதின்ம வயதினரில் 41% பேர் வாய்வழி உடலுறவில் ஈடுபடுவதாக CDC கூறுகிறது. 2018 இல் 26 மில்லியன் புதிய STD எனும் பாலியல் நோய்த்தொற்றுகளுக்கு 15 முதல் 24 வயதிற்குட்பட்டவர்களே காரணம் எனும் பகீரவைக்கும் உண்மையை CDC குறிப்பிடுகிறது.


























