பாகிஸ்தானில் இரண்டு ஆண்குறிகள் மற்றும் ஆசனவாய் இல்லாமல் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. International Journal of Surgery Case ஆய்வறிக்கை இத்தகவலை வெளியிட்டுள்ளது. டிஃபாலியா எனப்படும் இந்த அரிய மருத்துவ நிகழ்வு 5-6 மில்லியன் பிறப்புகளில் ஒருவருக்கு மட்டுமே நிகழக்கூடிய பாதிப்பு என மருத்துவ உலகம் தெரிவிக்கிறது. இஸ்லாமாபாத்தில் உள்ள மருத்துவர்களால் கொலோனோஸ்கோபி மூலம் உருவாக்கப்பட்ட ஒரு திறப்பு வழியாக சிறுவன் மலம் கழிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அக்குழந்தையின் ஆண்குறிகளில் ஒன்று ‘சாதாரண வடிவில்’ உள்ளதாகவும், ஒன்று மற்றொன்றை விட 1 செ.மீ. நீளமாக உள்ளதாகவும் அங்குள்ள பத்திரிக்கைகள் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. அக்குழந்தையின் இரண்டு சிறுநீர்க்குழாய்களும் ஒரே சிறுநீர்ப்பையில் இணைக்கப்பட்டுள்ளதால், இரண்டு ஆண்குறிகளிலிருந்தும் குழந்தை சிறுநீர் கழிக்கிறது. பாகிஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர்கள், குழந்தையின் கூடுதலான ஆணுறுப்பை நீக்க இன்னும் எந்த அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளவில்லை என்று கூறுகின்றனர்.
மருத்துவ வரலாற்றிலேயே இப்படியான நிலையில் பிறந்த குழந்தைகளின் 100 பதிவுகள் மட்டுமே உள்ளன. 1609ல் இந்த நிலையுடன் பிறந்த முதல் குழந்தை பதிவுசெய்யப்பட்டுள்ளது. குழந்தை அண்மையில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், குழந்தையின் குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் குறிப்பிடும்படியான இதுபோன்ற குறைகளோ, மாறுபாடுகளோ முன்னதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஃபாலியாவை ஏற்படுத்தும் ஆபத்து காரணி என்று எதுவும் மருத்துவ உலகில் இன்னும் அறியப்படவில்லை என்றாலும், தாயின் கருப்பையில் பிறப்புறுப்புகள் உருவாகும் போது ஏற்படும் சில மாறுபாடுகளால் இந்நிலை உருவாகிறது. இரண்டு பிறப்புறுப்புகளும் நன்கு வளர்ந்திருக்கும்போது அல்லது முறையே சிறியதாகவோ அல்லது சிதைந்ததாகவோ இருக்கும் போது அது முழுமையான மற்றும் பகுதியளவு டிஃபாலியா என்று கூறப்படுகிறது.
ஒருவேளை ஏதேனும் ஒரு ஆண்குறியில் ஏதேனும் பிரச்சினை காணப்படும் நிலையில், அது அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்படும். ஒருவேளை முழுமையான டிஃபாலியாவில் தோற்றத்தில் எந்தப் பிரச்சினை இல்லையென்றாலும், நோயாளியின் விருப்பத்திற்கேற்றார் போல் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படலாம். மருத்துவர்களின் கூற்றுப்படி, டிஃபாலியா நோயாளிகளில் 1 சதவீதத்தினர் தங்கள் மலக்குடலில் பிரச்சினையை எதிர்கொள்கின்றனராம்.


























