அண்மையில் சசிகுமார் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘அயோத்தி’ திரைப்பட பாணியில் தமிழகத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் அசாமிற்கு துரிதமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிகழ்வு நெஞ்சை உருக்குவதாக உள்ளது.
அசாமைச் சேர்ந்த 26 வயதுடைய ஜான் குஜூர் என்ற இளைஞர், வறுமையின் காரணமாக வீட்டையும், குடும்பத்தையும் விட்டு சென்னையில் செக்யூரிட்டி பணியில் சேர்ந்து வேலைசெய்து வந்துள்ளார். ஜான் குஜூருக்கு உடன்பிறந்தவர்கள் ஐந்து பேர் என்பதால் வறுமை கழுத்தை நெரிக்கும் நிலையில் அவர் இருந்துவந்துள்ளார். மேலும் குடும்பமே இவரது வருமானத்தை நம்பியே பிழைத்துவந்துள்ளது.
இந்நிலையில், அண்மையில் அதீத வெயில் தாக்கத்தின் காரணமாக ஜானை அம்மை நோய் தாக்கியுள்ளது. இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஜான் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்செய்தி அவரது குடும்பத்தை எட்டவே அவர்களுக்கு பேரிடியாக இது அமைந்துள்ளது. இதைத்தொடர்ந்து தாங்கள் வசிக்கும் பகுதியின் மாவட்ட ஆட்சியரை ஜானின் குடும்பத்தார் அணுகி விஷயத்தை விளக்கவே, அவர் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தியைத் தொடர்புகொண்டு ஜான் குஜூரின் உடலை அசாமிற்கு அனுப்பக் கோரியுள்ளார்.
இதையடுத்து ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தியின் மின்னல்வேக நடவடிக்கையின் பேரில் திருநெல்வேலி மாநகராட்சி ஆதவரற்றோர் இல்ல பொறுப்பாளர் சரவணன் மற்றும் ’பசியில்லா தமிழகம்’ அமைப்பைச் சேர்ந்த முகமதலி ஜின்னா ஆகியோரின் உதவியுடன், சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஜானின் உடல் கைப்பற்றப்பட்டு, அரசின் துரித வழிகாட்டுதல்படி பட்டினம்பாக்கம் காவல்துறையினர் விமானம் மூலம் அசாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் ஜான் குஜூரின் குடும்பத்தார் நெஞ்சுருகி நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் நிதர்சனத்தில் எதிரும் புதிருமானவர்கள் போல் மதவாத சக்திகளால் கட்டமைக்கப்பட்டுள்ள இச்சூழலில், ஒரு இஸ்லாமியராய் இந்து மதத்தில் தீவிர நம்பிக்கையுள்ள நபரின் இறந்த மனைவியின் உடலை பெரும் சிரமங்களுக்கு மத்தியில் அவர்களின் சொந்த மாநிலத்திற்கு சசிகுமார் அனுப்பிவைப்பது போன்ற காட்சிகளுடன் நல்லிணக்கத்தை விதைத்து கண்ணீர் சிந்தவைத்த ’’அயோத்தி’’ படத்தை ஒத்த இந்த உண்மை நிகழ்வு, கற்பனைக் கதாபாத்திரங்கள் நிஜத்திலும் உள்ளனர் என்ற நம்பிக்கையை விதைப்பதாக உள்ளது.


























