இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக மல்யுத்த வீரர்கள் டெல்லியில் போராட்டத்தில் குதித்துள்ளனர். கடந்த ஜனவரியிலேயே இதுகுறித்து இவர்கள் புகாரளித்த நிலையில், குற்ற்ம்சாட்டப்பட்ட பிரிஜ் பூஷன், மத்தியில் ஆளும் பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் என்பதால் அதுகுறித்து கண்துடைப்புக்காக மட்டுமே விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மல்யுத்த வீரர்கள் மீண்டும் சில தின்ங்களுக்கு முன்பாகப் போராட்டத்தில் குதித்தனர்.
பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டி தொடர்ந்து வலியுறுத்திவரும் அவர்கள், கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கைகளை வைத்துவருவது இந்திய அளவில் இந்தப் பிரச்சினை குறித்து கவனிக்கவைத்துள்ளது. தங்கள் கட்சியைச் சேர்ந்த நபர் என்பதால் பாஜக பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதாக எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பாஜக மீது குற்றம்சாட்டிவருகின்றன.
இவ்வாறு விஸ்வரூபமடையும் பிரச்சினையை மேலும் ஊதிப்பெரிதாக்கும் விதமாக ஓட்டப்பந்தய வீராங்கனையும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவருமான பிடி உஷா பேசியுள்ள கருத்து விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. மல்யுத்த வீரர்களின் போராட்டம் பற்றி அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, ’’இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) இதுபோன்ற பாலியல் துன்புறுத்தலுக்கான புகார்களுக்காகவே ஒரு குழுவைக் கொண்டுள்ளது. இவ்வாறு தெருக்களில் இறங்கிப் போராடுவதற்கு மாற்றாக அவர்கள் எங்களிடம் முன்பே வந்திருக்கலாம். ஆனால் அவர்கள் இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் இதுதொடர்பாக எந்தப்புகாரும் அளிக்க வரவில்லை. இந்த நடத்தை மல்யுத்த வீரர்களுக்கு மட்டுமல்லாது, விளையாட்டுக்கும் நல்லதல்ல. இதை அவர்கள் கொஞ்சம் ஒழுக்கத்துடன் கையாண்டிருக்கலாம்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதை மேற்கோள்காட்டி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள சின்மயி, ’’இதில் எந்தவொரு ஆச்சரியமுமில்லை. இவ்வாறு பாதிப்பிற்குள்ளான பெண்கள் தங்களது கடைசி முயற்சியான போராட்டத்தைக் கையிலெடுக்கும்போது இவர் போன்ற பெண்கள் அவர்களைத்தான் குற்றவாளியாக்குவார்கள். இவர் போன்று தமிழ்நாட்டின் பூமர் பெண்களின் கேள்வி, ’ஏன் முன்னாடியே சொல்லல?’ என்பதாகவே உள்ளது; ’அவ்வளவு பெரிய கவிஞர் மீது குற்றச்சாட்டா?’ என்பதாகவே உள்ளது; மேலும், ‘அவ்வளவு கண்ணியமாக நடந்துகொள்ளும் கவிஞர் எப்படி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டிருப்பார்?’ என்பதாகவே உள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு பிடி உஷா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


























