ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘ஃபர்ஹானா’. ஐஸ்வர்யா ராஜேஷ், செல்வராகவன், ஐஸ்வர்யா தத்தா, ஜித்தன் ரமேஷ், அனுமோல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பாக இதன் டிரெய்லர் வெளியானது. இதில் இஸ்லாமியப் பெண்ணாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், குடும்ப சூழல் காரணமாக கால் சென்டரில் வேலை செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் அதே குடும்ப சூழல் காரணமாக ஏதோ தவறான வேலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஈடுபடுவது போலவும், அதை குடும்பத்தாரிடமிருந்து மறைக்கப் பாடுபடுவது போலவும் இதில் இடம்பெரும் வசனங்கள் மற்றும் சில காட்சிகள் விவரிக்கின்றன.
ஏற்கனவே, சர்ஜூன் இயக்கத்தில் கலையரசன், மிர்னா நடிப்பில் ஓடிடியில் வெளியான ’புர்கா’ திரைப்படத்தின் சர்ச்சையே இன்னும் முடிந்தபாடில்லை. அதில் இஸ்லாமியப் பெண்கள் மதக் கட்டுப்பாடுகளை பலவந்தமாக பின்பற்ற கட்டாயப்படுத்தப்படுவது போலவும், இயக்குநர் சர்ஜூன் இல்லாத விஷயங்களை இட்டுக்கட்டி இஸ்லாம் குறித்து தவறாகச் சித்தரிப்பது போலவும் பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் அப்பட்டமான மிரட்டல்கள் இஸ்லாமிய அமைப்புகளால் எழுப்பப்பட்டன.
இந்நிலையில், அதைத்தொடர்ந்து மீண்டும் இஸ்லாமியப் பெண்ணின் வாழ்வியலை, மதம் சார்ந்த அவளது செயல்பாடுகளை கேள்விக்குள்ளாக்கும்படியான காட்சியமைப்புகளுடன் வெளியாகியிருக்கும் ’ஃபர்ஹானா’ டிரெய்லரும் இஸ்லாமிய அமைப்புகளால் கண்டனத்திற்குள்ளாகி வருகிறது.
ஃபர்ஹானா திரைப்படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து குரல்கொடுத்துள்ள இராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் இப்ராஹிம் சபீர், இதன் டிரெய்லரில் இஸ்லாமியப் பெண்களை அவமதிக்கும் வசனங்கள் இடம்பெறுவதாகவும், இஸ்லாமியப்பெண்கள் அணியும் புர்கா ஆடை கொச்சைப்படுத்தப்படுவதாகவும், ’புர்கா’ மற்றும் ’ஃபர்ஹானா’ படக்குழுவினர் மீது காவல்துறை சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டியும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆயினும் இதுபோன்ற மதச்சடங்குகளை கேள்விக்குள்ளாக்கும் படங்கள் இந்து சமயத்தை தாக்கி வெளிவரும்போது சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படுவதுபோல், இஸ்லாமியர்கள் அதை எடுத்துக்கொள்வதில்லை என்ற கேள்வியும் நெட்டிசன்களால் இணையத்தில் முன்வைக்கப்படுகிறது.


























