கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் பாதியிலேயே நிறுத்தப்பட்டு அவமதிக்கப்பட்ட நிகழ்வு தமிழ் ஆர்வலர்களிடையே கண்டனங்களைப் பெற்றுவருகிறது. கர்நாடகாவின் சிவமோகா பகுதியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், அந்தத் தொகுதி வேட்பாளரை ஆதரித்துப் பேசும் கூட்டத்தில் பாஜகவின் முன்னாள் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒலிக்கப்பட்ட நிலையில், ஈஸ்வரப்பா அதை பாதியிலேயே நிறுத்தினார். இதையடுத்து கன்னட வாழ்த்துப்பாடல் ஒலிக்கப்பட்டது. இதுதான் தற்சமயம் இந்த சர்ச்சைக்குக் காரணமாகியுள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவர் என்ற முறையில் அண்ணாமலை இதை எதிர்த்து மேடையில் எதுவும் பேசவில்லை என்றும், ஈஸ்வரப்பா தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் ஒலித்துக்கொண்டிருக்கையில் எப்படி அதை பாதியிலேயே நிறுத்தலாம்? என்றும் இருவருக்குமெதிராய் கண்டனங்கள் வலுக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி இதைக் கண்டித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்தும் தனது கட்சிக்காரர்களைத் தடுக்க முடியாத திரு.அண்ணாமலை அவர்கள், தமிழ் மக்களைப் பற்றி எப்படி கவலைப்படுவார். #ApologiseAnnamalai’’ என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ’’அடித்துக் கொண்டு புரள அது திமுக மேடை இல்லை சகோதரி கனிமொழி அவர்களே. ஒவ்வொரு மாநிலத்தின் மாநில கீதம் பாடிய பிறகுதான் வேறு மாநிலத்தின் வாழ்த்துப்பாடல் இசைக்கப்படும் என்பது நியதி. அந்த நியதியை தான் கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வர் திரு ஈஸ்வரப்பா அவர்கள் சுட்டிக் காட்டினார்.
நமது தேசியக் கொடியை ஏற்றிய பின் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்று தெரியாத ஒரு தலைவரை வைத்துக்கொண்டு இதெல்லாம் உங்களுக்கு தேவையா? “கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்” என்ற வரியை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் இருந்து நீக்கி மாநில பிரிவினையை விதைத்த சரித்திரம் அல்லவா உங்களது.
தமிழ் மக்களை, உங்களிடமிருந்தும் திமுகவினரின் மலிவான அரசியலிலிருந்தும் காப்பாற்றுவதே எங்கள் ஒரே பணி. கவலை வேண்டாம்!’’ என்று குறிப்பிட்டுள்ளார்.


























