நியூயார்க் நகரத்தில் உள்ள நியூ ஹோப் ஃபெர்ட்டிலிட்டி சென்டரில் ரோபோ போன்ற அமைப்பின் உதவியுடன் ஊசியைப் பயன்படுத்தி ஆணின் விந்தணுக்களை பெண்ணின் கருமுட்டைக்குள் புகுத்தியுள்ளனர். இதன் விளைவாக இரண்டு ஆரோக்கியமான கருக்கள் உருவாகி வளர்ந்து இறுதியில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.
ரிமோட்-கண்ட்ரோல்ட் எனப்படும் முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கும் இதன் மூலம், ஊசி மற்றும் கேமராவைப் பயன்படுத்தி கருமுட்டைக்குள் விந்தணுவை செலுத்தலாம். இதனால் அதிக ஊதியம் பெறும் கருவியலாளர்களின் தேவை குறைந்து செலவு கட்டுப்படுத்தப்படுவதாக இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட அறிக்கை கூறுகிறது.
’’இந்த தொழில்நுட்பம் ஒருநாள் இதற்கான தேவையுடையோரை கருவுறுதல் கிளினிக்குகளுக்கு செல்ல வேண்டிய அவசியத்தை நீக்கிவிடலாம். கர்ப்பம் தரிக்கும் சிகிச்சைக்காக ஒருமுறை கிளினிக்கிற்கு செல்ல அமெரிக்காவில் 20,000 டாலர்கள் செலவாகின்றன’’ என்று இந்த விந்தணு ரோபோவை உருவாக்கிய ஸ்பானிய நிறுவனமான ஓவர்ச்சூர் லைஃப்பின் தலைமை மரபியல் நிபுணர் சாண்டியாகோ முன்னே கூறுகிறார். கருவுறாதவர்களுக்கான கருத்தரித்தல் செயல்முறை வரும்காலங்களில் மகப்பேறு மருத்துவர்களால் தானியங்கி முறையில் நிகழ்த்தப்படும் என்று முன்னே நம்புகிறார்.
கன்சிவபிள் லைஃப் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆலன் முர்ரே, விலையுயர்ந்த கருவுறுதல் மருந்துகள் மற்றும் மருத்துவ நடைமுறைகள், அது தோல்வியடைந்தால் ஆகும் செலவினங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, சராசரியாக IVF எனப்படும் In vitro fertilization முறை மூலம் பெறப்படும் குழந்தையின் சராசரி செலவு 83,000 டாலர்கள் என குறிப்பிடுகிறார்.
குழந்தை பிறப்புக்கான வெற்றி விகிதங்களை அதிகரிப்பதன் மூலமும், இதுபோன்ற தானியங்கி ரோபாட்டிக்ஸ் உதவியுடன் இந்த IVF-ன் செயல்முறைகளைப் பின்பற்றுவதன் மூலமும் 70% செலவைக் குறைப்பதே அவரது நிறுவனத்தின் குறிக்கோள் என்று முர்ரே கூறுகிறார்.
ஒவ்வொரு ஆண்டும், உலகளவில் IVF மூலம் சுமார் 500,000 குழந்தைகள் பிறக்கின்றன, ஆனால் குழந்தைகளைப் பெறுவதற்கு உதவி தேவைப்படும் பெரும்பாலான மக்கள் அதற்கு பணம் செலுத்த முடியாதவர்களாக இருப்பதாகவும், கருவுறுதலுக்கான மருந்துகளை வாங்கமுடியாதவர்களாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விந்தணு ரோபோட் மூலம் உருவாக்கப்பட்ட முதல் குழந்தைகளின் விஷயத்தில், தானம் செய்யப்பட்ட முட்டைகள் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. மேலும் அவை உயர் தொழில்நுட்ப முறையில் கருத்தரித்த பிறகு தாயின் கருப்பையில் பொருத்தப்பட்டன.


























