விஜயின் அரசியல் பிரவேசம் குறித்த பத்திரிகையாளரின் கேள்விக்கு கார்த்தி சிதம்பரம் அளித்துள்ள பதில் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விகள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன. தளபதி விஜய் மக்கள் இயக்கம் மூலம் பொதுமக்களுக்கு உதவும் வகையிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அதன் நிர்வாகிகள் செய்துவருகின்றனர். மேலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உள்ளாட்சித் தேர்தலிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.
விஷயம் இப்படி போய்க்கொண்டிருக்க, விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்றும், வரக்கூடாது என்றும், வந்தால் என்னவாகும் என்பது குறித்தும் பல அரசியல் கட்சிகளின் தலைமைகள் கருத்து தெரிவித்துவருகின்றனர். விஜயின் ரசிகர்கள் வழக்கம் போல் அவரது படம் வெளிவரும்போது எத்தனை எதிர்பார்ப்புகளுடன் இருப்பார்களோ அப்படியே அவரது அரசியல் பிரவேசம் குறித்தும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்துவருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசியலில் தற்சமயம், தொழிலாளர்களுக்கான 8 மணிநேரத்திலிருந்து 12 மணி நேர வேலை மசோதா, திருமண நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் மதுபானம் பரிமாற அனுமதி உள்ளிட்ட ஆட்சேபத்துக்குறிய அறிவிப்புகள் பொதுமக்களை கொதிப்பில் வைத்திருக்கும் சமயத்தில், பத்திரிக்கையாளர் ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பதிவில் ’இதுதான் விஜய் தமிழக அரசியலில் நுழையவேண்டிய சரியான தருணம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் தான், இதை மேற்கோள் காட்டி சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், ’’தமிழகத்திற்கு தேவை வளர்ச்சி அரசியல். கவர்ச்சி, உணர்ச்சி அரசியல் அல்ல’’ என்று பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் தங்களின் கவர்ச்சியான பிம்பம் காரணமாக ரசிகர்களிடையே, தாங்கள் நாட்டை ஆளும்படியான தகுதியை பெற்றவர்கள் போன்றதொரு கட்டமைப்பை உருவாக்குவதை குறிப்பிட்டு விஜயை வம்பிழுக்கும் படியாக கார்த்தி சிதம்பரம் இந்த ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து இதற்கு விஜய் ரசிகர்கள் தங்கள் கருத்துகளால் கார்த்தி சிதம்பரத்தை வறுத்தெடுத்து வருகின்றனர். ’தமிழக வளர்ச்சிக்கு பாராளுமன்றத்தில் ஒரு எம்.பி.யாக தாங்கள் ஆற்றிய பங்கு என்ன?’, ’ஒடிடியில் எந்த படம் நல்லாயிருக்கு என்று கேட்பது வளர்ச்சி அரசியலில் வருமா? போன்ற கேள்விகளால் விஜய் ரசிகர்கள் கார்த்தி சிதம்பரத்தை துளைத்தெடுத்துவருகின்றனர்.


























