கோடைக் காலம் உச்சத்தை எட்டி வருகிறது. நிலவக்கூடிய உஷ்ணம், ’இதுவரை இல்லாத சூடான மார்ச்’, ’இதுவரை இல்லாத சூடான 2023’ போன்ற சாதனைகளைப் படைத்துவரும் அளவிற்கு வெயிலின் தாக்கம் கொன்று எடுக்கிறது. இத்தனைக்கும் இன்னும் கத்தரி வெயில் தொடங்வேயில்லை என்ற நிலையில், அது தொடங்கினால் இன்னும் என்ன கதிக்கு ஆளாவோம் என்பது பற்றித் தெரியவில்லை.
கோடையைச் சமாளிக்க நீர் மோர், இளநீர், தர்பூசணி, எலுமிச்சை சாறு, வெள்ளரி, பழச்சாறு போன்ற நீராகாரங்களை அருந்த மருத்துவர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்திவரும் நிலையில், நீர் ஆகாரங்களின் விற்பனையை ஓவர் டேக் செய்யும் அளவிற்கு பீர் ஆகாரத்தின் விற்பனை கோடை சூட்டை விட அதிகம் சூடிபிடித்துள்ளது.
ஆம்… மதுபான விற்பனைக்கு புகழ்பெற்ற நமது அண்டை மாநிலமாக பாண்டிச்சேரியில் பீர் விற்பனை களைகட்டுகிறதாம். பீர் போன்ற மதுபானங்கள் குடிப்பது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று கூறினால் யார் கேட்கிறார்கள். கோடைக்கு ஜில்லென்ற பீரை அருந்துவதையே மதுப்பிரியர்கள் அதிகம் விரும்புகின்றனர்.
தகவல்களின் அடிப்படையில் சாதாரண நாட்களைக் காட்டிலும் கோடையை முன்னிட்டு அங்கு 40% பீர் விற்பனை அதிகரித்துள்ளதாம். பொதுவாக 2 லட்சம் கேஸ் பீர் விற்பனையாகும் பாண்டிச்சேரியில் 3 லட்சம் கேஸ் பீர்கள் விற்பனையாகிறதாம். தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்களை விட பாண்டிச்சேரியில் மதுபானங்களின் விலை குறைவும், அதிக வகைகள் விற்பனையாவதும் பிற மாநிலத்தவர்களை பாண்டிச்சேரியை நோக்கி ஈர்த்துவருகிறது. கோடையை தணிக்க நீர், மோர், ஆகியவற்றைப் பின்னுக்குத்தள்ளி பீர் வாங்க அங்கு கூட்டம் முண்டியடிப்பது குறிப்பிடத்தக்கது.


























