2 வயது மதிக்கத்தக்க சிவாஹுவா வகையைச் சேர்ந்த Pearl என்ற பெயருடைய நாய் உலகின் மிகச்சிறிய நாய் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளது.
Pearl சுமார் 9.14 செ.மீ. உயரமே உள்ளது. அதாவது இது ஐஸ்கிரீம் குச்சியின் உயரத்தை விடவும் குறைவான உயரம். மேலும் Pearl உலகின் மிகச்சிறிய மனிதரான ஜோதியை விட 7 மடங்கு உயரம் குறைவானதாக உள்ளது. இதன் நீளமான 12.7 செ.மீ. அளவு, அமெரிக்க டாலர் நோட்டின் நீளத்தை ஒத்தது. இதன் எடை 553 கிராம்.
Pearl, இதற்கு முன்னதாக உலகின் மிகச்சிறிய நாய் என்ற பட்டத்தைப் பெற்றிருந்த மிராக்கல் மில்லி என்ற நாயின் உறவுக்கார நாயாகும். மில்லி கடந்த 2020ம் ஆண்டு, Pearl பிறன்னதற்கு முன்பாக இறந்துவிட்டது. மில்லியின் சகோதரி மகளே Pearl. மில்லி பிறக்கும்போது இருந்ததைப் போன்றே Pearl-ம் பிறக்கும்போது ஒரு அவுன்சுக்கும் குறைவாக வெறும் 28 கிராம் எடையே இருந்தது.
இதுகுறித்து மில்லியின் உரிமையாளரான வெனிசா சாம்லர் கூறுகையில், ’’நாங்கள் அவளைப் பெற்றதை நினைத்து பெருமைப்படுகிறோம். வேறு யாருக்கும் கிடைக்காத விதமாக, எங்களது சொந்த சாதனையை நாங்களே முறியடிக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்துள்ளது. இந்தச் செய்தியை உலகிற்குத் தெரியப்படுத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்’’ என்று கூறினார்.
Pearl அண்மையில் இத்தாலியின் மிலனில் ’Dei Record’ என்ற திறமை சார்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஈஸ்டர் முட்டை வடிவிலான இருக்கையில் அமரவைக்கப்பட்டு அதன் உரிமையாளர் வெனிசா Pearl-ஐ மேடைக்குக் கொண்டுவந்துள்ளார்.
நிகழ்ச்சியில், Pearl-க்கு, சிக்கன் மற்றும் சால்மன் மீன் போன்ற தரமான உணவுவகைகள் உண்ணப்பிடிக்கும் என்று வெனிசா தெரிவித்தார். மேலும் மிலனைச் சுற்றி சமீபத்தில் அதிக ஷாப்பிங்குகளில் Pearl ஈடுபட்டதாகவும் வெனிசா தெரிவித்தார். மேலும் Pearl குறித்துப் பேசுகையில், ’’அவள் ஒரு சிறிய பந்து போன்றவள்; தேநீர் கோப்பையை விட சற்றே உயரமானவள்’’ என்று குறிப்பிட்டார்.
Pearl-ன் உலக சாதனைக்குறிய அதன் உயரம், அவள் பிறந்த புளோரிடாவின் ஒர்லாண்டோ பகுதியின் Crystal Creek Animal மருத்துவமனையில் அளவிடப்பட்டுள்ளது. சுமார் 3 முறை, குறிப்பிட்ட இடைவெளிகளில் அவளது உயரம் அளவிடப்பட்டுள்ளது.
வெனிசாவிடம் மேலும் 3 நாய்கள் உள்ளனவாம். ஆனால் அவை சாதாரண நாய்களைப் போன்ற அளவிலேயே இருக்குமாம். Pearl மட்டுமே இதில் விதிவிலக்கு. என்னதான் Pearl-க்கு 2 வயதானாலும் மனதளவில் அவள் ஒரு குழந்தை என்று வெனிசா புன்னகைக்கிறார்.
உலக அளவில் இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிகக் குறுகிய நாய் UKவைச் சேர்ந்த ஆர்தர் மார்பிள்ஸ் என்பவருக்குச் சொந்தமான குள்ள யார்க்ஷயர் டெரியர் வகை நாயாகும். முட்டி அளவுள்ள இந்த நாய் 7.11 செமீ உயரமும், அதன் மூக்கின் நுனியில் இருந்து வால் நுனி வரை 9.5 செமீ நீளமும் இருந்தது. இது 1945 இல் தனது இரண்டாவது பிறந்தநாளுக்கு முன்பாக இறந்ததுபோனது.


























