சீனாவைச் சேர்ந்த ஒரு முதியவர் சூதாட்டத்தின் மீதான மோகம் காரணமாக தனது சொந்த பேத்தியையே கடத்திய கொடூரம் அரங்கேறியுள்ளது.
யுவான் என்ற பெயரைக் கொண்ட சீனாவின் ஷாங்காய் நகரத்தைச் சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், சூதாட்டத்தின் மீதான அதீத மோகம் காரணமாக இழிவான ஓர் காரியத்தில் ஈடுபட்டுள்ளார். தனது மகள் வழிப் பேத்தியை அவர் சூதாட்டம் விளையாடப் பணம்வேண்டி கடத்தியுள்ளார்.
வழக்கம் போல் தனது 4 வயது பேத்தியைப் பள்ளியிலிருந்து அழைத்துவரும்போது ஒரு கடத்தல் காரர் போல் அவர் தனது பேத்தியிடம் நட்ந்துகொண்டுள்ளார். மேலும் தனது பேத்தியின் தாயான சொந்த மகளிடமே, ’’மூன்று நாட்களில் 5,00,000 யான்(72,500 அமெரிக்க டாலர்கள்) தரவில்லையெனில் உன் மகளை உயிருடன் பார்க்கமுடியாது’’ என்று மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.
ஒருகட்டத்தில் தனது மகளையே கொன்று விடுவதாக அவர் மிரட்டிய நிலையில், மகளின் புகாரைத் தொடர்ந்து காவலர்கள் அந்த முதியவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்ட முதியவர் யுவான், ’’65 வயதான என் மீது என் மகள் வெறுப்பின் காரணமாக வழக்கு தொடர்ந்துள்ளார். நான் நன்றாக இருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. நான் இறக்கவேண்டும் என்று அவள் விரும்பினாள். குடும்ப விஷயத்தை குடும்பத்தோடு முடித்துக்கொள்ளாமல் சட்டரீதியாக சந்தித்த அவள் ஒரு நன்றியற்றவள்’’ என்று தனது மகள் மீது அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முதியவர் யுவான் தொடர்ந்துவந்த நிலையில், சில நடவடிக்கைகளுக்குப் பிறகு தற்சமயம் சிறை வாழ்க்கையுடன் அவர் ஒத்துழைக்கத் துவங்கியுள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்றை சீன ஊடகங்கள் வெளியிட்ட நிலையில், முதியவருக்கு எதிராக கருத்துகள் வலுத்துவருகின்றனர். பலரும் அவர் சாகும் வரை திருந்தப்போவதில்லை என்றும், அவரது குடும்பத்தினர் அவருடனான உறவை முடித்துக்கொள்ளவேண்டும் என்றும் கருத்திட்டுவருகின்றனர்.


























