உலக சுகாதார அமைப்பு அண்மையில் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டது. உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனாவும், அதற்கு அடுத்த இடத்தில் இந்தியாவும் நீடித்துவந்த நிலையில், 2023ம் ஆண்டின் மத்தியில் இந்தியா சீனாவை முந்தி உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் என்று அந்த அறிக்கை கூறியது.
அதாவது என்ணிக்கை அளவில் 2023ம் ஆண்டின் ஜூன் மாதத்தில் சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடி என்ற அளவிலும், இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடி அளவிலும் இருக்கும் என்று இந்த அறிக்கை விளக்கியது. இந்நிலையில், இந்தியாவின் மக்கள் தொகை அதிகரிப்புக்கு சிறுபான்மையினர்களே காரணம் என்று அந்தராஷ்டிரிய இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவின் தொகடியா சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ’’இந்தியா அதிக மக்கள் தொகையை எட்ட சிறுபான்மையின மக்களே காரணம். இந்தியாவின் மொத்த மக்கள் தொகை அளவில் இந்துக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை அதிகரிப்புக்கு இந்து மக்கள் தங்கள் பங்கை அளிக்கவில்லை.
இவ்வாறு அதிகரிக்கும் சிறுபான்மையின மக்களின் என்ணிக்கை அடுத்த 15 அல்லது 20 ஆண்டுகளில் அஸ்ஸாமை பாதிக்கும். அதனால் இந்தியாவில் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை அமல்படுத்தியே ஆகவேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
முன்னதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி காங்கிரஸ் ஆட்சியில் மின்சாரம் போதிய அளவில் வழங்கப்படாததன் காரணமாகவே இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்ததாகப் பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.


























