ஏ.ஆர்.ரஹ்மான் உலக அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர். இசைத்துறையின் உயரிய விருதான கிராமி விருது, ஆஸ்கர் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைக் குவித்து உலக நாடுகளின் கவனத்தை, இந்தியாவின் மீதும், தமிழ்நாட்டின் மீதும், தமிழரின் மீதும் திருப்பியவர். காலத்தால் அழியாத பாடல்கள் மூலம் இசைப்புயலாக தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் சிறந்த இசையமைப்பாளராகக் கோலோச்சிவருகிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் பொதுவில் தமிழ் மொழி மீது அதீத பற்று உடையவர். உலகின் எவ்வளவு பெரிய மேடைகளுக்கு அவர் சென்றாலும் தமிழில் ’எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று சொல்லாமல் அவர் வருவதில்லை. மேலும் தமிழ்நாட்டில் மத்திய அரசால் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்தும் அவர் பல மேடைகளில் தரமான பல சம்பவங்களைச் செய்துள்ளார். அந்தக் காணொலிகளை நாம் இதற்கு முன்னதாக கண்டிருப்போம்.
இந்நிலையில், விருது மேடை ஒன்றில் தனது மனைவியை தனக்கே உரிய கேலியால் ஏ.ஆர்.ரஹ்மான் வச்சு செய்த காணொலி இணையத்தில் வலம்வந்துகொண்டிருக்கிறது. தனியார் பத்திரிக்கை ஒன்றின் விருது வழங்கும் விழாவில் மேடையில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு ஆகியோர் நின்றிருந்த சமயம், சாய்ரா பானுவிடம் தொகுப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் குரல் குறித்து கேட்டார்.
அப்போது சாய்ரா பானு பேசத்துவங்கியதும், அவரைக் கலாய்க்கும் பதத்தில், ’இந்தில வேண்டாம்… தமிழ்ல பேசுங்க’ என்று ரஹ்மான் திடீரெனக் குறுக்கிட்டார். இதைத் தொடர்ந்து பார்வையாளர்கள் மத்தியில் பலத்த கைதட்டல், ஆரவாரமும் எழுந்தது. இதையடுத்து பேசிய சாய்ரா பானு, ’மன்னிக்கவும்! எனக்கு அவ்வளவு சரளமாக தமிழ் பேச வராது. இவரது குரல் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் தான் எனக்கு இவர் மீது காதல் ஏற்பட்டது’ என்று ஆங்கிலத்தில் பேசினார்.
’’தமிழ் என்று வந்துவிட்டால் தனது மனைவியையே கூட தலைவர் விடமாட்ராறே’’ என்ற கருத்துகளுடன் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


























