கனடா நாட்டின் டொராண்டோவைச் சேர்ந்த உணவு எழுத்தாளரான டிஃப்பனி லீ, தனது குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய பல்வேறு வழிகளில் பரிசோதனை செய்துவந்த நிலையில், அவர் தனது 18 மாத குழந்தைக்கு கிரிக்கெட் எனும் பூச்சியை உணவாகச் சேர்க்க முடிவு செய்துள்ள நிகழ்வு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையின் புரத உட்கொள்ளலில் எந்தவிதக் குறையும் வைக்காமல், அதே நேரம் மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கான குடும்பத்தின் செலவினத்தைக் குறைக்க உணவில் கிரிக்கெட்டுகளைச் சேர்ப்பதை வழக்கமாக்கிக்கொண்டதாக லீ கூறுகிறார்.
தான் ஒரு உணவு எழுத்தாளர் என்ற முறையில், என்டோமோபேஜி எனப்படும் பூச்சிகளை உண்பது உட்பட எதையும் முயற்சி செய்யும் நபராக தான் எப்போதும் இருப்பதாக லீ கூறுகிறார். வறுத்த டரான்டுலாவின்(எட்டுக்கால் பூச்சியின் ஒரு வகை) கால்கள் முதல் தேள் வரை அனைத்தையும் தான் சுவைத்துள்ளதாக அவர் கூறுகிறார். மேலும் “தொடர்ந்து ஏற்றம்காணும் விலை காரணமாக, கிரிக்கெட் பஃப் தின்பண்டங்கள், கிரிக்கெட் புரோட்டீன் பவுடர் மற்றும் வறுத்த கிரிக்கெட்டுகளை பண்ணைகளிலிருந்து பெற முடிவு செய்தேன்’’ என்கிறார் லீ.
இதன் மூலம் மாதச் செலவான ரூ.25,000ல் ரூ.8,000 வரை மிச்சம் பிடிப்பதாக லீ தெரிவிக்கிறார். பூச்சிகளை உணவாக எடுத்துக்கொள்வது குறித்து லீ-யின் குழந்தை அச்சப்படவில்லையாம்; மாறாக அதை ஏற்றுக்கொண்டதாம்.
பெற்றோர், தங்களது குழந்தைகள் 6 மாத வயதை எட்டினாலே அவர்களுக்குப் பூச்சியை உணவாக உட்கொள்ள குழந்தை மருத்துவ நிபுணர்கள் அனுமதித்திருப்பதை லீ மேற்கோள்காட்டினார். அறிக்கைகளின்படி இவ்வாறு பூச்சிகளை உட்கொள்வது அவற்றுக்கும் நமக்குமான ஓர் பந்தத்தை ஏற்படுத்துவதாக அவர் கூறுகிறார்.


























