கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வரும் மே 10ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான பரப்புரை விரைவில் முடிவடையவிருக்கும் நிலையில், காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் சூறாவளிப் பரப்புரை மேற்கொண்டுவருகின்றன.
இந்நிலையில், கர்நாடகத் தேர்தலில் பாஜகவினர் இந்து முஸ்லீம் பிரச்சினைகள் குறித்து மக்களிடம் பேசி வாக்கு சேகரிக்கவேண்டும் என்றும், இஸ்லாமியர்களின் வாக்கு பாஜகவினருக்குத் தேவையில்லை என்றும் கே.எஸ்.ஈஸ்வரப்பா கூறியுள்ளது கர்நாடக அரசியலில் அனலைக் கிளப்பியுள்ளது.
கர்நாடகாவின் சிவமோகா தொகுதியில் நடைபெற்ற வீரசைவ லிங்காயத் கூட்டத்தில் பேசிய பாஜகவின் மூத்த தலைவரும், கர்நாடகாவின் முன்னாள் அமைச்சருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா, ’’சிவமோகா தொகுதியில் 50,000 முதல் 55,000 இஸ்லாமியர்களின் வாக்குகள் உள்ளன. இதில் எந்த இஸ்லாமியரும் எங்களுக்கு வாக்களிக்க வேண்டாம். மருத்துவம் மற்றும் கல்வி சார்ந்து நாங்கள் உதவியுள்ள இஸ்லாமியர்கள் மட்டும் எங்களுக்கு வாக்களித்தால் போதும்.
எதிர்க்கட்சிகள் இஸ்லாமியர்களின் வாக்குகளைக் கவர, இந்துக்களைத் தாழ்ந்தவர்கள் போலவும், இஸ்லாமியர்களை உயர்ந்தவர்கள் போலவும் ஒரு கட்டமைப்பை உருவாக்குகின்றன. இதன் மூலம் அவர்கள் இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் பிரிக்கின்றனர்’’ என்று தெரிவித்தார்.


























