டைனோசரை கொன்ற விண்கற்கள் தரையிறங்கிய இடத்திற்கு அருகில், உலகின் இரண்டாவது ஆழமான துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 274 மீட்டர் (899 அடி) ஆழமும் 1,47,000 சதுரஅடி பரப்பளவும் கொண்ட மெக்சிகோவில் உள்ள செட்டுமல் யுகடன் தீபகற்பத்தின் விரிகுடாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பொது ஆராய்ச்சி மையம் ஒன்று முதலில் இந்தத் துளையை செப்டம்பர் 2021ல் கண்டுபிடித்தது. ஆனால் இதுகுறித்த தரவை கடந்த பிப்ரவரியில் தான் வெளியிட்டது. சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்களின் கிரெட்டேசியஸ் எனப்படும் மூன்றாம் நிலை அழிவை ஏற்படுத்தியதாகக் கருதப்படும் ஒரு விண்கல் உருவாக்கிய பள்ளமான சிக்சுலுப் பள்ளத்திற்கு அருகில் இந்த நீலத்துளை உள்ளது.
ஸ்கூபா டைவர்ஸ், நீர் மாதிரிகள் மற்றும் சுற்றுச்சூழல்-ஒலி ஆய்வுகள் ஆகியவற்றின் உதவியுடன், விஞ்ஞானிகள் செட்டுமால் பகுதியிலுள்ள இந்த நீலத்துளை 13,690 சதுர மீட்டர் (147,357 சதுர அடி) பரப்பளவையும், 80 டிகிரி செங்குத்தான சாய்வான பக்கங்களையும் கொண்டிருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.
ஃபிரண்டியர்ஸ் இன் மரைன் சயின்ஸ் இதழில் பிப்ரவரி 23 அன்று வெளியிடப்பட்ட ஆய்வின்படி, மாயன் மொழியில் ‘ஆழமான நீர்’ என்று பொருள்படும் ’தாம் ஜா’ என்று இந்த நீலத்துளைக்கு பெயரிடப்பட்டுள்ளது. புதிதாக அடையாளம் காணப்பட்ட இந்த நீலத்துளை பெலிஸ் கடற்கரையில் உள்ள துளையைப் போன்று ஆழமானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


























