வியாபாரத்தைப் பெருக்க ஒவ்வொரு வணிகரும் புதுப்புது ஐடியாக்களை சிந்திப்பதுண்டு. சிலர் துவக்கத்தில் விலை குறைவாக பொருட்களை விற்பார்கள். இன்னும் சிலர் இலவசங்களை அறிவித்து திக்குமுக்காடவைப்பார்கள். பெரும்பாலானோர் இந்த இலவச ஃபார்முலாவை துவக்கத்தில் அறிவித்தே தனது கடை மீது பொதுமக்களின் கவனத்தைத் திருப்புவர். இங்கும் அப்படி ஒருவர் தனது கடையின் வாடிக்கையாளர்களைக் கவர வித்தியாசமான ஒரு ஆஃப்ரைத் தந்துள்ளார்.
கோயமுத்தூரின், குனியாமுத்தூரில் அல் அமீன் என்ற பெயரில் இறைச்சிக் கடை நடத்திவருபவர் ரியாஸ் அகமது. இவர் தனது இறைச்சி வியாபாரத்தில் ஆடு மற்றும் கோழி இறைச்சிகளை விற்பனை செய்துவருகிறார். இந்நிலையில், தனது வியாபாரத்தைப் பெருக்கும் பொருட்டு வாடிக்கையாளர்களுக்கு புதுமையான ஆஃபரை அவர் அளித்துள்ளார். அதாவது அவரது கடையில் ரூ.5000-க்கு மேல் கோழி அல்லது ஆட்டு இறைச்சி வாங்கும் நபர்கள் பணத்தை EMI முறையில் மாதத் தவணையாக செலுத்தலாம். இதனால் அக்கடையில் அசைவப் பிரியர்கள் பலரும் முகாமிட்டு இறைச்சி வாங்க முண்டியடிக்கின்றனர்.
இதுகுறித்து கடையின் உரிமையாளர் ரியாஸ் கூறுகையில், ’’பொதுவாக டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களுக்கு தான் EMI முறையில் பணம் செலுத்தும் வசதி வழங்கப்படும். ஆனால் முதல் முறையாக இறைச்சி வாங்க மாதத்தவணை முறையில் பணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளேன்.
எத்தனையோ பேர் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு இறைச்சி வாங்க மொத்தமாக பணமில்லாமல் தவிக்கின்றனர். அப்படிப்பட்டோருக்கு வசதியாக இந்த, ரூ.5000க்கு மேல் EMI முறையை அறிமுகப்படுத்தியுள்ளேன். இதனால் அவர்கள் 3,6,9 மற்றும் 12 ஆகிய தவணைகளில் அதற்கான தொகையை செலுத்தமுடியும். இதற்காக 3 மாதத்திற்கு ரூ.170 என்ற குறைந்த தொகையையே வட்டியாக வசூலிக்கிறோம்’’ என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, ’இறைச்சி வாங்க EMI முறையா?’ என்ற வியப்பில் பலரும் அல் அமீன் கடையை அணுகிவருகின்றனர்.


























