இராமநாதபுரம் மாவட்டத்தின் ராமேஸ்வரத்தில் வசிக்கும் அரசகுமார் என்ற நபர் கடந்த 16ம் தேதி தனுஷ்கோடியின் கரையிலிருந்து சற்று உள்ளாக தனது நாட்டுப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சமயம் அவரது படகில் புறா ஒன்று தஞ்சமடைந்துள்ளது.
அதன் காலில் பிளாஸ்டிக் துண்டு ஒன்று கட்டப்பட்டிருந்த நிலையில், அதில் சில எண்கள் பொறிக்கப்பட்டிருந்தன. மேலும் அதில் ஆங்கிலத்தில் சில சொற்கள் எழுதப்பட்டுள்ளன. இதையடுத்து சந்தேகமடைந்த அரசகுமார் அந்தப் புறாவை ராமேஸ்வரம் துறைமுக காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து புறாவின் காலில் இருந்த எண்ணிற்கு அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசுகையில், அந்தப் புறா இலங்கையின் யாழப்பாணம் பகுதியிலுள்ள வல்வெட்டித்துறையில் நடைபெற்ற புறா பந்தயத்தில் கலந்துகொண்ட புறா என்பதும், சுதன் என்ற நபருக்குச் சொந்தமான புறா என்பதும் தெரியவந்துள்ளது.
தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு கடந்த 15ம் தேதி வல்வெட்டித்துறையில் நடைபெற்ற புறா பந்தயத்தில் சுதனுக்குச் சொந்தமான 28 புறாக்கள் கலந்துகொண்டதாகவும், அதில் 8 புறாக்கள் திரும்பி வரவில்லை என்றும், அதில் 1 புறா இது என்றும் சுதன் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். சுதன் கூறிய தகவல்களைத் தொடர்ந்து இது அவருடைய 8 புறாக்களில் ஒன்று தான் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
தற்சமயம் இராமேஸ்வரம் துறைமுகம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் ரகு என்பவரிடம் இந்தப் புறா ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுமார் 300 கிலோமீட்டர் தூரம் பறக்கும் ஆற்றல் உடைய இந்தப் புறா மீண்டும் தன் உரிமையாளரிடம் பறந்து செல்லலாம் என்று யூகிக்கப்படுகிறது.


























