சமூகத்துடன் ஒட்டி வாழாமல் துண்டிக்கப்பட்ட மனநிலையில் வெதும்பும் இளைஞர்களுக்கு ஆதரவாக தென்கொரியா ஒரு புதிய முயற்சியை அறிவித்துள்ளது. பாலின சமத்துவம் மற்றும் குடும்ப அமைச்சகம், சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழும் தனிமனிதர்களுக்கு மாதத்திற்கு 650,000 கொரியன் வன் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.41,000(500 டாலர்கள்) வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
இந்த நடவடிக்கை இவ்வாறு தனித்துவாழும் நபர்களின் உளவியல், உணர்ச்சி ஸ்திரத்தன்மை மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சி, Larger Youth Welfare Support Act என்ற சட்டத்தின் ஒரு பகுதியாக, சராசரி தேசிய வருமானத்தை விட குறைவான வருமானம் கொண்ட குடும்பங்களில் வசிக்கும் 9 முதல் 24 வயதுடைய இளைஞர்களுக்குக் கிடைக்கும்.
இதுகுறித்த தென்கொரியா நாட்டின் பாலின சமத்துவம் மற்றும் குடும்ப அமைச்சகத்தின் அறிக்கையின்படி, 19 முதல் 39 வயதுக்குட்பட்ட தென்கொரியர்களில் தோராயமாக 3.1 சதவீதம் பேர் “தனிமையில் வாடும் இளைஞர்கள்” என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அதாவது அவர்கள் குறைந்த இடங்களிலேயே தங்களை வெளிக்காட்டிக்கொண்டு வாழ்கிறார்கள் மற்றும் நீண்ட காலத்திற்கு வெளிஉலகத்தில் கலப்பதிலிருந்தும் தங்களை துண்டித்துக்கொள்கின்றனர்.
இந்த சதவீதமானது அங்கு வாழும் மக்கள் தொகையில் சுமார் 3,38,000 நபர்களுக்கு சமம். இதில் 40 சதவீதம் பேர் தங்களது இளமைப் பருவத்திலேயே தனிமையில் வாடத் தொடங்குகின்றனராம். தனிமையில் இருக்கும் இளைஞர்களின் உடல் வளர்ச்சி மெதுவாக இருக்கும் மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட மனநலக் கஷ்டங்களால் அவர்கள் பாதிக்கப்படலாம் என்ற உண்மையை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. மாதாந்திர உதவித்தொகை உள்ளூர் நிர்வாக சமூகநல மையத்திற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு அல்லது அவர்கள் சார்பாக விண்ணப்பிக்கும் அவர்களின் பாதுகாவலர்கள், ஆலோசகர்கள் அல்லது ஆசிரியர்களுக்குக் கிடைக்கும்.
தென் கொரியா அதிக தற்கொலை செய்துகொள்வோர் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. உலக மக்கள்தொகை மதிப்பாய்வுகளின் அடிப்படையில், உலகில் அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகள் நிகழும் நாடுகளின் பட்டியலில் தென்கொரியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, தென்கொரியாவில் உள்ள மாணவர்கள் கல்வியில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் பெரும் அழுத்தத்தில் உள்ளனர். அதிக மனஅழுத்தம் மற்றும் மோசமான சமூகஉறவுகள் அவர்களை தற்கொலை அபாயத்தில் வைக்கின்றன. கல்வியால் தங்கள் குடும்பங்களுக்கு பிறர்முன் அவமரியாதையை பெற்றுத்தந்து விடுவோமோ என்ற பயம் அவர்களை நம்பிக்கையின்மையிலும், விரக்தியிலும் ஆழ்த்துகிறது.
தற்கொலையால் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் சிகிச்சை அளிக்கக்கூடிய மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்படுவதால், இந்த நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கு இதுபோன்ற நடவடிக்கைகளை தென்கொரியா மேற்கொண்டுவருகிறது.


























