அரிதினும் அரிதான நிகழ்வாக குழந்தை ஒன்று ஒவ்வொரு கை மற்றும் காலிலும் தலா 6 விரல்கள் என 24 விரல்களுடன் பிறந்து வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாவட்டம், நிஜாமாபாத் மாவட்டம், கம்மாரிப்பள்ளி மண்டலத்தில் உள்ள யர்கட்லா கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகளான சுங்கராபு சாகர் மற்றும் ரவளி ஆகியோர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கர்ப்பம் தரித்த ரவளிக்கு அண்மையில் பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, கொருட்லா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
இதில் அதிசயிக்கத்தக்க வகையில், புதிதாகப் பிறந்த குழந்தை தனது இரு கைகளிலும் தலா ஆறு விரல்களையும், தனது ஒவ்வொரு கால்களிலும் ஆறு விரல்களையும் கொண்டு 24 விரல்களுடன் பிறந்து அனைவரையும் வியப்பிலாழ்த்தியது. இந்த நிகழ்வு சமீப கால நிகழ்வுகளில் மிகவும் அரிதானது; இது மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், நல்ல எடையுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இதுதொடர்பாக பிறந்த குழந்தையின் பெற்றோர்களான சாகர் மற்றும் ரவளி மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் மற்றும் தங்கள் மகனை கடவுள் கொடுத்த வரமாக அவர்கள் கருதுகின்றனர். ’’என் மகனை இளவரசன் போல் வளர்ப்பேன்’’ என்று கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ரவளி. இந்த அசாதாரண பிரசவம் குறித்த செய்தி வேகமாக பரவிய நிலையில், பலர் அதிசய குழந்தையைப் பார்க்க மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.
இவ்வாறு கூடுதல் விரல்களுடன் குழந்தை பிறக்கும் நிகழ்வுக்கு ‘Polydactyly’ என்று மருத்துவ உலகம் பெயர்வைத்துள்ளது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இவ்வாறு கூடுதலாக அமைந்துவிடும் செயல்படாத விரல்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும். இருப்பினும், இது அரிதான நிகழ்வு என்பதால், 24 விரல்களுடன் பிறந்த இந்த ஆண் குழந்தையின் குடும்பத்தினர் தங்கள் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து விரல்களை நீக்க விருப்பம் தெரிவிக்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


























