யேமன் தலைநகர் சனாவில் ரமலான் நன்கொடை பெற முண்டியடித்துக்கொண்டுக் கூடியதில் 78 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
யேமனின் ஈரானுடன் இணைந்த ஹூதி இயக்கத்தால் நடத்தப்படும் முக்கிய தொலைக்காட்சி செய்தியான அல் மசிரா டிவி, இச்சம்பவம் குறித்து, குறிப்பிட்ட தொகையினர் இதனால் இறந்துள்ளதாகவும், 13 பேர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானின் இறுதி நாட்களில் வியாபாரிகள் தேவையுடையோருக்கு நன்கொடைகளை விநியோகிக்கும் போது இந்த கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளதாக ஹூதி கட்டுப்பாட்டில் உள்ள உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
யேமன் மதிப்பில் 5,000 ரியால்கள் மதிப்புடைய அந்த நன்கொடையைப் பெற நூற்றுக்கணக்கான மக்கள் ஒரு பள்ளியில் குவிந்திருந்ததாக, இதன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் இதுகுறித்து ஆங்கில ராய்ட்டர்ஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நன்கொடை நிகழ்வை ஏற்பாடு செய்த இரு வியாபாரிகள் குற்றம்சாட்டப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக உள்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று, பொருளாதாரத்தைச் சிதைத்து, மில்லியன் கணக்கானோரை பட்டினியில் தள்ளிய எட்டு வருட உள்நாட்டுப் போரில் ஏமன் சிக்கித் தவித்துவருகிறது. 2014 ஆம் ஆண்டு தலைநகர் சனாவில் இருந்து ஹூதிகள் அரசாங்கத்தை வெளியேற்றிய பின்னர் 2015 இல் சவூதி தலைமையிலான கூட்டணி யேமனில் தலையிட்டது. இந்த மோதல் சவூதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பினாமி போராக பரவலாகக் கருதப்படுகிறது.
சவூதி அரேபியாவுடனான சமீபத்திய அமைதிப் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், மீதமுள்ள வேறுபாடுகளை களைவதற்கு மேலும் விவாதங்கள் நடத்தப்படும் என்றும் யேமனின் ஹவுதி இயக்கத்தின் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர் கூறினார்.


























