லுகாஸ் ஹெல்ம்கே என்ற நபர் ஒரு மணி நேரத்தில் வியக்கவைக்கும் அளவான 3,206 புஷ்-அப் களை செய்து சாதனை படைத்துள்ளார். இது உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறவுள்ளது. அதாவது ஒரு நிமிடத்திற்கு 53 புஷ்-அப்கள் என்ற விகிதத்தில் லுகாஸ் இந்த சாதனையைச் செய்துள்ளார்.
இச்சாதனையை லுகாஸ் தனது ஒரு வயது மகனுக்கு “மனிதன் நினைத்தால் இயலாதது எதுவும் இல்லை’’ என்பதை நிரூபித்துக்காட்டவும், உத்வேகம் அளிக்கும் முயற்சியாகவும் செய்துள்ளார்.
இந்தச் சாதனையை செய்ய லுகாஸ் 3 ஆண்டுகள் கடுமையான பயிற்சியை மேற்கொண்டுள்ளார். 30 வினாடிகளுக்கு 26 என்ற கணக்கில் ஒரு நிமிடத்திற்கு 52 புஷ் அப்களைச் செய்ய லுகாஸ் திட்டமிட்டிருந்த நிலையில், திட்டமிட்டதை விடவும் அதிகமாக 30 வினாடிகளுக்கு 26.7 புஷ் அப்கள் செய்து இச்சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
உலக சாதனைக்காக புஷ் அப்கள் செய்யப்படும் சமயம் அதற்கான சரியான தோற்ற அமைப்பை பங்கேற்பாளர்கள் கடைபிடிக்கவேண்டும். இல்லையெனில் அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. அந்த விதத்தில் லுகாஸ் சாதனையில் 1% அளவிலான சுமார் 34 புஷ் அப்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லையாம்.
ஒவ்வொரு புஷ்-அப்பிற்கும், அவர் தனது உடலை நேராக வைத்திருக்க வேண்டும், முழங்கால்கள் அல்லது இடுப்பில் எந்த வளைவும் இருக்க முடியாது, மேலும் அவரது முழங்கை குறைந்தது 90-டிகிரியில் இருக்கும் வரை கீழாக உடலை இறக்கவேண்டும், பின்னர் நேராக உயர்த்த வேண்டும்.
”புஷ் அப் மற்றும் உடல் சார்ந்த மற்ற போட்டிகளில் நான் சாதிக்கவிருக்கும் எல்லைகளுக்கான முதல் சாதனையாக இது இருக்கும்” என்று லுகாஸ் தெரிவித்தார். இதற்கு முந்தைய உலக சாதனையான, ஒரு மணி நேரத்தில் 3,182 என்ற எண்ணிக்கை அடிலெய்டு மெக்கானிக் டேனியல் ஸ்காலி என்றவரால் ஏப்ரல் 2022ல் எட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.


























