வெளியில் சுற்றுலாவுக்குக் கிளம்பினால் நாம் மறக்காமல் விசிட் அடிக்கும் இடங்களில் முக்கியமானது நீச்சல் குளங்கள். நீச்சல் குளங்களில் மனிதர்கள் குளிக்கும் சுகமே தனி தான். அதுவும் வெயில்காலம் துவங்கி உச்சத்தை அடைந்துவரும் இந்த நேரத்தில் நீச்சல் குளங்களில் ஆட்டம் போடவேண்டி அவற்றை நோக்கி படையெடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. மாறாக நீச்சல் கற்றுக்கொள்ளவேண்டி நீச்சல் குளங்களைப் பயன்படுத்துவதும் மற்றொரு ரகம்.
இந்த நிலையில் தான் நீச்சல் குளங்களில் குளியல் போடுவாரை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமான செய்தி தற்சமயம் வெளியாகியுள்ளது. நீச்சல் குளங்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சமீபத்தில் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதில் பொது நீச்சல் குளங்களில் உள்ள தண்ணீரின் தரம் ஆராய்ச்சி செய்யப்பட்டு முடிவு வெளியிடப்பட்டது. அதன்படி அவற்றில் சராசரியாக 72 லிட்டர் அளவிலான சிறுநீர் கலந்துள்ளதாக முடிவில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வின் தகவல் பொது நீச்சல் குளங்களைப் பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இதில் குளிப்பவர்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாவதோடு பல உடல் உபாதைகளுக்கு இது வழிவகுக்கும். எனவே, நீச்சல் குளங்கள் ஒவ்வொரு பயன்பாட்டிற்குப் பிறகும் பராமரிக்கப்படவேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.
இதுதவிர, நீச்சல் குளங்களிலும் உள்ள நீச்சல் பயிற்றுனர்கள், பயிற்றுனருக்கான கல்வி தகுதி கட்டாயம் முடித்திருக்க வேண்டும்; நீச்சல் குளத்தின் வெளிப்புறத்தில் குறைந்தபட்சம் சான்றிதழ் பெற்ற 2 உயிர் காப்பாளர்கள் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும்; பெண்களுக்கு பெண் பயிற்றுனர்கள் மூலம் மட்டுமே பயிற்சி மேற்கொள்ள வேண்டும்; முதலுதவி பெட்டி அனைத்தும் நீச்சல் குளங்களிலும் இருக்க வேண்டும்; நீச்சல் குளத்தை பயன்படுத்துவோரின் விவரங்கள் பதிவேடு மூலம் சேகரிக்கப்பட வேண்டும்; 10 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் தகுந்த துணையோடு வந்து உள்ளார்களா என்பதை உயிர் காப்பாளர் மற்றும் நீச்சல் பயிற்றுனர் கண்காணிக்க வேண்டும் போன்ற முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.


























