இன்றைய காலத்து காதல் தனது பரிணாம வளர்ச்சியில் என்னென்னவோ எல்லைகளைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. ஆனாலும் காதலை நிரூபிக்கவும், அன்பின் சிறப்பான வெளிப்பாடு இதுதான் என்று கருதியும் சிலர் முட்டாள்தனமான அதே சமயம் வியக்கவைக்கும் அளவுக்கான செயல்களில் ஈடுபடுவதுண்டு.
அப்படி, சீனாவைச் சேர்ந்த ஒருவர், தன்னை மீண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டி தனது முன்னாள் காதலியிடம் கெஞ்சுவதற்காக ஒரு இரவு முழுவதும் மழையில் மண்டியிட்டது சீனாவின் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள டஜோவில், இளைஞர் ஒருவர் தனது முன்னாள் காதலியின் அலுவலக கட்டிடத்திற்கு வெளியே பூங்கொத்துகளுடன் சுமார் 21 மணிநேரம் மழையில் நனைந்தவாறு முழங்காலிட்டு தன்னை ஏற்றுக்கொள்ளுமடி மன்றாடிக் கேட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த மார்ச் 28 அன்று நடைபெற்றுள்ளது. அன்றைய தினம் மதியம் 1 மணி முதல் அடுத்த நாள் காலை 10 மணிவரை அவர் இவ்வாறு மண்டியிட்ட நிலையில், கெஞ்சலில் ஈடுபட்டுள்ளார்.
தொடர்ந்து தன்னைத் திரும்ப ஏற்றுக்கொள்ளுமாறு தனது முன்னாள் காதலியிடம் அந்நபர் கெஞ்சிய நிலையில், அப்பகுதியில் இருந்தவர்கள் இந்த நிகழ்வை வீடியோவாகப் படம்பிடித்துள்ளனர்.
இதுகுறித்து அங்கிருந்த நபர் ஒருவர் விவரிக்கையில், “எங்களில் பலர் அவரை வெளியேறும்படி பேச முயன்றோம். ஆனால் அவர் கேட்கவில்லை. மண்டியிட்டுக் கெஞ்சவேண்டும் என்ற அவசியமே இல்லை. அவரது முன்னாள் காதலி அந்த நபர் அவ்வளவு கெஞ்சியும் அவரை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. ஆனால் அவர் தன் சுயத்தை இழந்து அங்கேயே மண்டியிட்டபடி இருந்தார்.’’ என்று கூறினார்.
இதுபற்றி அங்கிருந்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததில், சில நாட்களுக்கு முன்பாக தனது காதலி தன்னை பிரிந்துவிட்டதாக அந்நபர் கூறியதாகவும், தான் காதலியிடம் மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும், காதலியுடன் மீண்டும் சேருவேனென்று நம்பிக்கை கொண்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.


























