கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கலெக்டர் ஷ்ரவன் குமார் ஜடாவத் அண்மையில் உளுந்தூர் பேட்டை கூவாகம் கூத்தாண்டவர் கோயிலுக்கு சென்ற சமயம், கோவிலுக்கு வெளியே தனது காலணியை கழற்றி அதை தன் டவாலியை எடுத்துக்கொண்டு வெளியே போட சொல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. கலெக்டர் பதவியில் இருந்தால் தனக்குக் கீழ் பணிபுரிபவரிடம் அவரை அவமதிக்கும்படி என்ன வேண்டுமானாலும் சொல்லலாமா என்று நெட்டிசன்களும் அரசியல் தலைவர்களும் அவரது செயலுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து டவாலியிடம் தான் தனது செருப்பை எடுக்கச் சொல்லவில்லை என்று கலெக்டர் ஷ்ரவன் குமார் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ’’கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் என்னை பற்றி தவறான வதந்திகள் பரவியிருந்ததை பார்த்தேன். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவிலில் வரும் மே 2ம் தேதி திருவிழா நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யவேண்டி நான், மாவட்ட எஸ்பி மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் ஏப்ரல் 11ம் தேதி சென்றிருந்தேன்.
அப்போது, கோவில் வளாகத்துக்கு அருகில் செல்லும்போது, வாளாகத்துக்குள்ளே எல்லோருடைய காலணிகளையும் பார்த்த நான், இதனை அப்புறப்படுத்த சொல்லிவிட்டு கோயில் உள்ளே சென்றுவிட்டேன். பின்னால் வந்த என்னுடைய உதவியாளர், என்னுடைய காலணியை எடுத்துக்கொண்டு போனதை தெரிந்து கொண்டு, அவரை அழைத்து இது போல செய்யக்கூடாது என அறிவுரை வழங்கினேன். இந்த சம்பவத்துக்கு நான் மிகவும் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


























