‘அதோ வரான்… இதோ வரான்’ என்றபடி ஒழுவழியாக தனது ரஃபேல் வாட்ச் பில்லையும், திமுக தலைவர்களின் ஊழல் பட்டியலையும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டார். கோவையைச் சேர்ந்த தனது நண்பர் சேரலாதன் ராமகிருஷ்ணனிடம் இருந்து ரூ.3 லட்சத்திற்கு ரபேல் வாட்ச்சை வாங்கியதாக தெரிவித்த அண்ணாமலை, தனது வீட்டு வாடகை, ஊழியர்கள் சம்பளம், பெட்ரோல் செலவு ஆகியவற்றைச் சமாளிக்க தனது நண்பர்கள் உதவுவதாக தெரிவித்தார். மேலும் திமுக அமைச்சர்கள் ஏ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரின் சொத்துப் பட்டியலையும் வெளியிட்டு அதிரவைத்தார்.
இதைத்தொடர்ந்து, இந்நிகழ்வை மையமாக வைத்து வழக்கம் போல் இணையத்தில் கேள்விகளும், விவாதங்களும் றெக்கை கட்டிப் பறக்கத் துவங்கின. அண்ணாமலை தனது ரபேல் வாட்சின் எண் 149 என்று முந்தைய பேட்டி ஒன்றின் போதும், 147 என்று நேற்றைய செய்தியாளர் சந்திப்பிலும் தெரிவித்தது பேசுபொருளானது. மேலும் தான் முதல் தலைமுறை அரசியல்வாதி என்பதால் மாதம் 7 லட்சம் வரை அரசியல் பணிகளுக்கு செலவாவதாகவும், அதனை தனது நண்பர்கள் தந்து உதவுகிறார்கள் என்று கூறியதும், ’இதெல்லாம் நப்புற மாதிரியாங்க இருக்கு?’ என்ற ரேஞ்சில் மீம் கிரியேட்டர்களால் கவனம் பெற்று மீம்களாக வலம்வந்துகொண்டிருக்கிறது.
இதனிடையே இதுகுறித்த கேள்விக்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அண்ணாமலையைக் கலாய்க்கும் விதமாக செய்தியாளர்களிடம் பதிலளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. செய்தியாளர்கள் அவரிடம், வாட்ச்சின் சீரியல் எண்ணில் 147 மற்றும் 149 என்ற முரண்பாடு உள்ளதாக கேட்கப்பட்ட நிலையில், ”நான் காலையில் தான் டெல்லியிலிருந்து வந்தேன். வந்ததிலிருந்து தொகுதிப் பணிகளில் ஈடுபட்டுள்ளேன். அந்த வீடியோவை நான் முழுதாக இன்னும் பார்க்கவில்லை. 147 என்ற எண்ணுக்கும், 149 என்ற எண்ணுக்கும் நடுவில் 1 தானே வித்தியாசம். இது பெரிய வித்தியாசமா? பில் கேட்டீர்கள். பில் கிடைத்ததல்லவா. அவ்வளவுதான். நீங்கள் பில் தானே கேட்டீர்கள், சீரியல் நம்பரா கேட்டீர்கள்?” என்று அண்ணாமலையை பங்கமாக கலாய்க்கும் விதமாக சிரித்தவாறே பதிலளித்தார்.
ஏற்கனவே தமிழக பாஜகவில் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் ஆகிய நிர்வாகிகளிடையே வாய்க்கால் தகராறு நிலவிவருகிறது. கட்சி சார்ந்த சில முடிவுகளில் இருதரப்பினருக்கும் அவ்வப்போது முரண்பாடு எழுவது உண்டு. அதிமுக கூட்டணி குறித்த அண்ணாமலையின் முடிவின்போதும் வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் அதை ஏற்க மறுத்ததாக தகவல்கள் வெளியான நிலையில், இச்சம்பவம் எதிர்க்கட்சிகளின் வெறும் வாய்க்கு அவல் கிடைத்ததாக இருக்கிறது.


























